செங்கல்பட்டு மாவட்டத்தில் வரும் 23ம் தேதி திட்டமிடல் குழு உறுப்பினர் தேர்தல்

செங்கல்பட்டு, ஜூன் 10:செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைக்கப்பட உள்ள மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் அட்டவணையை கலெக்டர் ராகுல்நாத் அறிவித்துள்ளார். தமிழ்நாடு தேர்தல் ஆணைய சட்டபூர்வ ஆணையின்படி, செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைக்கப்பட உள்ள மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் கீழ்க்காணும் அட்டவணைப்படி நடைபெறுகிறது. கடந்த 7ம் தேதி தேர்தல் அறிவிப்பு வெளியாகி, காலை 11 மணி முதல் மாலை 3 மணிவரை வேட்புமனு தாக்கல் துவங்கியது. இன்று (10ம் தேதி) வேட்புமனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாளாகும். அனைத்து வேட்பு மனுக்களும் வரும் 12ம் தேதி பரிசீலிக்கப்படும். இதன்பிறகு, 14ம் தேதி மாலை 3 மணிவரை வேட்புமனு திரும்ப பெறப்படுகிறது.

இதை தொடர்ந்து, வரும் 23ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 3 மணிவரை மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்களுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பின்னர், அந்த வாக்குப்பதிவு முடிவடைந்ததும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இதற்கான தேர்தல் நடைமுறைகள் வரும் 24ம் தேதி முடிவு பெறுகிறது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திட்டக்குழு உறுப்பினர்களுக்கான முதல் கூட்டம் வரும் 28ம் தேதி நடைபெறும். தேர்தலில் மாவட்ட திட்டமிடும் குழுவுக்கு, மாவட்ட ஊராட்சியிலிருந்து 6 உறுப்பினர்களும், மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் ஆகியவற்றிலிருந்து 6 உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

The post செங்கல்பட்டு மாவட்டத்தில் வரும் 23ம் தேதி திட்டமிடல் குழு உறுப்பினர் தேர்தல் appeared first on Dinakaran.

Related Stories: