இருதரப்பினர் மோதல் எதிரொலி கரூர் அருகே காளியம்மன் கோயிலுக்கு சீல் வைப்பு

*ஆர்டிஓ கார் முற்றுகையால் பரபரப்பு

தோகைமலை : கரூர் மாவட்டம் கடவூர் வட்டம் தரகம்பட்டி அருகே மேலப்பகுதி ஊராட்சி வீரணம்பட்டியில் காளியம்மன், பகவதி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கான திருவிழா கடந்த செவ்வாய்க்கிழமை அன்று காளியம்மன் மற்றும் பகவதி அம்மன் ஆகிய தெய்வங்களுக்கு கரகம் பாலித்து திருவிழா தொடங்கப்பட்டது.நேற்று முன்தினம் புதன்கிழமை பொங்கல் வைத்தல் கிடா வெட்டுதல் போன்ற வழிபாடு நிகழ்ச்சிகள் தொடங்க இருந்தது. இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த பட்டியலினத்தைச் சேர்ந்த ஒரு வாலிபர் காளியம்மன் கோயிலுக்குள் வழிபாடு செய்வதற்காக வந்துள்ளார். அப்போது முன் மண்டபத்திற்கு வரக்கூடாது என்று சிலர் அந்த வாலிபரை தடுத்ததாக தெரிகிறது. இதனால் இவர்களுக்குள் சலசலப்பு ஏற்பட்டது.

பின்னர் இரு தரப்பினர் இடையே மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டதால் தகவலறிந்த கடவூர் தாசில்தார் முனிராஜ், குளித்தலை போலீஸ் டிஎஸ்பி ஸ்ரீதர், மேல பகுதி ஊராட்சி மன்ற தலைவர் மாணிக்கம், மைலம்பட்டி வருவாய் ஆய்வாளர் நெப்போலியன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், காளியம்மன் திருவிழா தொடங்கியதால் விழாவை பாதியில் நிறுத்த வேண்டாம். இருதரப்பினரும் கோயிலுக்கு வெளியில் இருந்து சாமி தரிசனம் செய்து திருவிழாவை முடித்து வைக்க வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது.

இதனால் கோயிலுக்கு பொங்கல் வைத்தல், கிடா வெட்டுதல், நேர்த்திக்கடன் செலுத்துதல் உள்பட அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்து கோயிலில் ஒரு தரப்பினர் பூட்டி வைத்தனர். இதனை அடுத்து நேற்று காளியம்மன் பகவதி அம்மன் கரகம் எடுத்துவிடும் நிகழ்ச்சி தொடங்கியது. இதில், காளியம்மன் பகவதி அம்மன் கரகம் ஊர்வலமாக எடுத்துச்சென்று கோயிலுக்கு கிணற்றில் விடப்பட்டது. அப்போது குளித்தலை ஆர்டிஓ புஷ்பா தேவி, குளித்தலை டிஎஸ்பி ஸ்ரீதர், கடவூர் தாசில்தார் முனிராஜ் ஆகியோர் இடத்திற்கு வந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர்களை கோயிலுக்கு உள்ளே அனுமதிக்குமாறு வருவாய்த்துறையினர் பொதுமக்களிடம் கோரிக்கை வைத்தனர்.

அப்போது மற்றொரு தரப்பினர் கோயிலுக்கு உள்ளே பட்டியல் இன மக்களை அனுமதிக்க முடியாது என்று எதிர்ப்பு தெரிவித்து கோயிலை சுற்றி பெண்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊர் முக்கியஸ்தர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் கோயிலுக்குள் பட்டியலின மக்களை அனுமதிக்கவில்லை என்றால் கோயிலுக்கு சீல் வைக்கப்படும் என்று தெரிவித்தனர்.

இதனால் கோயிலுக்கு சீல் வைக்க வைப்பதற்கு அதிகாரிகள் முற்பட்டனர். இதில் பெண்கள் மற்றும் அங்கிருந்தவர்கள் கோயிலுக்கு சீல் வைக்க விடாமல் தடுத்தனர். பின்னர் போலீசார் உதவியுடன் காளியம்மன் கோயில் முன்பாக உள்ள நுழைவு வாயில் இடதுபுறம் மற்றும் வலது புறம் உள்ள வாயில் என மூன்று வாயிலுக்கும் சீல் வைக்கப்பட்டது. இதேபோல் அருகில் இருந்த பகவதி அம்மன் கோயிலுக்கும் குளித்தலை ஆர்டிஓ புஷ்பாதேவி தலைமையில் நேற்று மாலை 6 மணியளவில் சீல் வைக்கப்பட்டது.

அதன்பின்னர் ஆர்டிஓ புஷ்பா தேவி புறப்படும் போது பொதுமக்கள் கோயிலுக்கு சீல் வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து 2 மணி நேரம் அவரது காரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.பாதுபாப்பு பணியில் குளித்தலை டிஎஸ்பி ஸ்ரீதர் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆர்டிஓ காரை முற்றுகையிட்டதால் அவரை போலீசார் பாதுகாப்பாக அருகிலுள்ள மேப்பகுதி விஏஓ அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர்.

இதையறிந்த அப்பகுதி மக்கள் ஆர்டிஓ., வை வெளியே வெளியே விடாமல் முற்றுகையிட்டனர். இதனால் கரூர் ஏடிஎஸ்பி மோகன் நேரில் வந்து குளித்தலை ஆர்டிஓ புஷ்பாதேவியை பாதுகாப்பாக வழியனுப்பி வைத்தார். இருப்பினும் தொடர்ந்து பொதுமக்கள் முற்றுகையிட்டதால் கூட்டநெரிசலில் சென்ற ஆர்டிஓவின் பொலீரோ ஜீப் மோதியதில் அப்பகுதியைச் சேர்ந்த பவதாரணி (17) என்ற சிறுமியின் காலில் முறிவு ஏற்பட்டது. இதையறிந்த போலீசார் அந்த சிறுமியை சிகிச்சைக்காக மைலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

The post இருதரப்பினர் மோதல் எதிரொலி கரூர் அருகே காளியம்மன் கோயிலுக்கு சீல் வைப்பு appeared first on Dinakaran.

Related Stories: