விருத்தாசலத்தில் பெருமாள் கோயில் தேர் கவிழ்ந்து வாலிபர் காயம்

வேப்பூர்: விருத்தாசலத்தில் பெருமாள் கோயில் தேர் கவிழ்ந்து வாலிபர் காயமடைந்த சம்பவத்தால் பரபரப்பு நிலவியது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பெரியார் நகர் தெற்கு பகுதியில் ருக்மணி சத்தியபாமா சமேத ராஜகோபால சுவாமி கோயில் வைகாசி பிரம்மோற்சவ விழா கடந்த 31ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் காலை சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகளும், இரவு சுவாமி வீதியுலாவும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று தேர் திருவிழாவையொட்டி காலை 7 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. அதன்பின்னர் அலங்கரிக்கப்பட்ட சிறிய தேரில் சுவாமி தேரோட்டம் தொடங்கியது. கோயிலுக்கு அருகே வந்தபோது திடீரென தேர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அப்போது தேரின் அருகே நின்றிருந்த பக்தர்கள் பதறி ஓடினர். இதில் நாச்சியார்பேட்டையை சேர்ந்த வினோத்குமார் என்ற வாலிபர் படுகாயமடைந்தார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் பக்தர்கள் அனைவரும் சேர்ந்து தேரை நிமிர்த்தி மீண்டும் தேரோட்டத்தை தொடங்கினர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.

The post விருத்தாசலத்தில் பெருமாள் கோயில் தேர் கவிழ்ந்து வாலிபர் காயம் appeared first on Dinakaran.

Related Stories: