கோயிலில் ஒரு சிறிய கோபுர நுழைவு வாயில் உள்ளது. கோயில் ஒரு பாறை வெட்டு கோயிலாக உள்ளது. இங்கு கருநெல்லிநாதர் மற்றும் சொக்கி அம்மன் சிலைகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. இக்கோயில் இந்து சமய மற்றும் அறநிலையத்துறையால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்த கோயிலில் 2005ம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. 17 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மகா கும்பாபிஷேகம் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அரசின் ஒப்புதலோடு தனியார் பங்களிப்போடு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. மகா கும்பாபிஷேக பணிகள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பாலஸ்தாபனம் பூஜைகளோடு தொடங்கியது. சாமி சன்னதியில் பொருத்தப்பட்டுள்ள ஓடுகளை பழுதுபார்த்து புதுப்பிக்கவும், சுவாமி, அம்பாள் சன்னதி மற்றும் மூலவர் விமானம் ஆகியவற்றில் பஞ்சவர்ணம் பூசுதல், கோவில் கோபுரம் மற்றும் சுற்றுச்சுவர்களை பராமரித்து புதிய வண்ணம் பூசுதல், பழுதடைந்த மின் விளக்குகளை மாற்றி புதிய மின் விளக்குகள் பொருத்துதல், சுவாமி, அம்பாள் சன்னதி வாசல்களில் பித்தளை தகடுகள் பதிக்கும் பணி, கோயில் முன்பு உள்ள தெப்பக்குளம் பராமரிப்பு உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
பராமரிப்பு பணிகள் கடந்த சில நாட்களாக தீவிரமாக நடைபெற்று வருகின்றன. திருப்பணிகளை கோயில் செயல் அலுவலர் தேவி மற்றும் திருப்பணி குழுவினர் கண்காணித்து உரிய ஆலோசனை வழங்கி வருகின்றனர். திருப்பணிக்குழு சங்கர் கூறும்போது, ‘‘கோயிலில் திருப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கோவில் முழுவதும் உள்ள கல்தூண்களில் அடித்துள்ள வண்ண பெயிண்ட்டுகள் நவீன வாட்டர் வாஷ் டெக்னாலஜி முறையில் அழிக்கப்பட்டு வருகின்றது. ஆரம்ப காலகட்டங்களில் கோவில் தூண்கள் எப்படி இருந்ததோ அதே போன்று பெயிண்டிங் இல்லாமல் காட்சியளிக்கும் வகையில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. சுமார் 60 சதவிகித பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. மற்ற பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. வரும் செப்டம்பர் மாதம் கும்பாபிஷேகம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது’’ என்றார்.
The post பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணி தீவிரம்: புதுப்பொலிவு பெறும் பாண்டியர்கால சிவன் கோயில்.! 17 ஆண்டுகளுக்குபின் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது appeared first on Dinakaran.