செங்கல்பட்டில் உழவர் சந்தையை புனரமைக்க ₹36 லட்சம் ஒதுக்கீடு

செங்கல்பட்டு, ஜூன் 8: செங்கல்பட்டில், உழவர் சந்தையை புனரமைக்க ₹36 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள உழவர் சந்தைகள் விரைவில் புனரமைக்கப்படும் என ஏற்கனவே சட்ட பேரவையில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் தொடர்ச்சியாக, நேற்று முன்தினம் கோவை, செங்கல்பட்டு, ஈரோடு, கள்ளக்குறிச்சி, மதுரை, நாமக்கல், புதுக்கோட்டை, சேலம், திருப்பூர், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள உழவர் சந்தைகள் புனரமைப்பு பணிக்காக ₹8.75 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் கடந்த 2000ம் ஆண்டு உழவர் சந்தை துவங்கப்பட்டு 23 ஆண்டுகள் ஆகின்றது.

ஆனால், இந்த உழவர் சந்தையில் அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை. இதனால், இங்கு கடை வைத்துள்ள வியாபாரிகள் விற்பனை இல்லாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று செங்கல்பட்டு உழவர் சந்தைக்கு ₹36 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த உழவர் சந்தையில் கழிப்பறை, குடிநீர் வசதிகள் செய்து தர வேண்டும். மேலும், குரங்குகளிடம் இருந்து காய்கறிகளை பாதுகாக்க கூண்டு அமைத்து தர வேண்டும். மழை காலங்களில் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வியாபாரிகளும், விவசாயிகளும் கோரிக்கை வைத்துள்ளனர். செங்கல்பட்டு உழவர் சந்தை நிர்வாகி கூறுகையில், ‘‘தமிழகத்தில் உள்ள உழவர் சந்தையில் 25 உழவர் சந்தையை புனரமைப்பு செய்ய தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதில், செங்கல்பட்டு உழவர் சந்தை பெயர் இடம்பெற்றுள்ளது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. மேலும், இந்த உழவர் சந்தை செங்கல்பட்டு சுற்றியுள்ள விவசாயிகள், வியாபாரிகள் பயன்பெறும் வகையில் இயங்கும்.’’ என்றார்.

The post செங்கல்பட்டில் உழவர் சந்தையை புனரமைக்க ₹36 லட்சம் ஒதுக்கீடு appeared first on Dinakaran.

Related Stories: