தர்மபுரி மாவட்டத்தில் அரசின் திட்டங்கள் பாகுபாடின்றி மக்களுக்கு கிடைக்க நடவடிக்கை பஞ்.தலைவர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்

தர்மபுரி, ஜூன் 8: தர்மபுரியில் அரசின் திட்டங்கள் அனைத்தும், பொதுமக்களுக்கு எவ்வித பாகுபாடுமின்றி சமமாகக் கிடைப்பதை, ஊராட்சி மன்ற தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தினார். தர்மபுரி மாவட்டத்தில் 251 கிராம ஊராட்சிகள் உள்ளன. கிராம மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்தல். குடிநீர் கிணறு தோண்டுதல், கழிவுநீர் கால்வாய், தெரு விளக்குகள், ஊர்சாலைகள் அமைத்தல், சாலை பராமரிப்பு, சிறிய பாலங்கள் கட்டுதல், வீட்டுமனைப் பிரிவுகளுக்கு அனுமதி வழங்குதல், கிராம நூலகங்களைப் பராமரித்தல். தொகுப்பு வீடுகள் கட்டுதல், இளைஞர்களுக்கான பொழுது போக்கு மற்றும் விளையாட்டு மைதானங்களை நிறுவுதல், பராமரித்தல் ஆகிய பணிகளை ஊராட்சி நிர்வாகங்கள் மேற்கொண்டு வருகின்றன.
மேலும் வீட்டுவரி, குடிநீர் வரி, தொழில்வரி, சொத்துவரி போன்ற வரிகள் வசூலிக்கப்பட்டு, அடிப்படை பணிகளுக்கு செலவிடப்படுகிறது. இதுதவிர, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்ட நிதிகளையும், மானியங்களையும், உதவித்தொகைகளையும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலமாக, ஊராட்சிகளுக்கு வழங்குகின்றன. மத்திய, மாநில அரசுகள் வழங்கும் மானியங்கள் தான் முதன்மையான வருவாய் ஆகும்.

இந்நிலையில் நேற்று, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 251 கிராம ஊராட்சி நிர்வாகக் கட்டமைப்பின் செயல்பாடுகளை சரியான வகையில் வழி நடத்தவும், கிராம ஊராட்சியால் அளிக்கப்பட வேண்டிய சேவைகள், நிறைவேற்ற வேண்டிய கட்டாயக் கடமைகள், விருப்ப கடமைகள் ஆகியவற்றை சிறப்பான முறையில் செயல்படுத்தவும், நடப்பில் உள்ள திட்டங்களை செயல்படுத்துவதில் எழும் ஐயப்பாடுகளை தெளிவுப்படுத்தவும், கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில், அனைத்து ஊராட்சி மன்றத் தலைவர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது.

இதில் கலெக்டர் சாந்தி தலைமை வகித்து பேசியதாவது: தர்மபுரி மாவட்டத்தில் தற்போது 251 கிராம ஊராட்சிகளில் நடைமுறைபடுத்தப்படும் இணையவழி வரிவசூல், மனைப் பிரிவு ஒப்புதல் வழங்குதல், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டம் போன்ற முக்கியத் திட்டங்கள் தொடர்பான நடைமுறைகளை தெளிவுப்படுத்தி, அன்றாட நிர்வாகத்தை எளிய முறையில் எடுத்துசெல்ல, அரசின் முனைப்பு முயற்சிகளுக்கு ஊராட்சி மன்றத் தலைவர்கள் ஒத்துழைக்க வேண்டும். தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை, தங்களது ஊராட்சிகளுக்கு முழுமையாக பயன்படுத்திக் கொண்டு, பொதுமக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் பூர்த்தி செய்ய, நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தற்போதைய டிஜிட்டல் சூழலில் இணையதள சேவைகளை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள, போதுமான விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும்.

இளைஞர்களின் விளையாட்டு திறனை ஊக்குவிக்கும் வகையில், அந்தந்த ஊராட்சி பகுதிகளில் விளையாட்டு போட்டிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மேலும், கிராம சாலை மேம்பாட்டு திட்டம், ஜல்ஜீவன் இயக்கம் போன்ற திட்டங்களை முழுமையான பயன்படுத்திக் கொள்ள உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து செயல்பாடுகளிலும் சிறந்த ஊராட்சியாக, தங்களது ஊராட்சிகள் அமைவதற்கு ஊராட்சி மன்ற தலைவர்கள் முனைப்போடு செயல்பட வேண்டும். அரசின் திட்டங்கள் அனைத்தும், பொதுமக்களுக்கு எவ்வித பாகுபாடுமின்றி சமமாகக் கிடைப்பதை உறுதி செய்யவேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார். தொடர்ந்து, ஊராட்சி மன்ற தலைவர்கள், தங்களது ஊராட்சிகளில் உள்ள அடிப்படை கோரிக்கைகள் குறித்து கலெக்டரிடம் தெரிவித்தனர். கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) தீபனா விஸ்வேஸ்வரி, ஊராட்சிகள் உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) மாலா உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்துகொண்டனர்.

The post தர்மபுரி மாவட்டத்தில் அரசின் திட்டங்கள் பாகுபாடின்றி மக்களுக்கு கிடைக்க நடவடிக்கை பஞ்.தலைவர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: