உயர வைத்தவரின் உடல் வாடலாமா?.. வெயிலில் மீன் விற்ற தந்தைக்கு ஏசி கார் வாங்கி தந்தார் மகன்: ராமநாதபுரம் அருகே ‘மணக்கும் பாசம்’

ராமநாதபுரம்: தந்தை வெயிலில் மீன் விற்கக்கூடாது என்பதற்காக ரூ.14 லட்சத்தில் ஏசி கார் வாங்கி கொடுத்து, மீன் வியாபாரம் பார்க்க சொன்ன மகனின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் அருகே அச்சுந்தன்வயல் கிராமத்தை சேர்ந்தவர் சிவானந்தம்(61). இவர் மனைவி காளியம்மாள் உதவியுடன் ராமநாதபுரம், திருப்புல்லாணி, மண்டபம், கீழக்கரை கண்மாய், குளங்களில் மீன் பிடித்து அதனை விற்பனை செய்து வருகிறார். மீன் விற்ற பணத்தில் மகன் சுரேஷ் கண்ணனை மரைன் இன்ஜினியரிங் படிக்க வைத்துள்ளார்.

படிப்பை முடித்த சுரேஷ்கண்ணன் வளாகத் தேர்வில் தேர்ச்சிப் பெற்று வளைகுடா நாட்டில் வேலைக்கு சென்றார். கை நிறைய சம்பளம் கிடைத்ததும், ஓட்டு வீட்டிலிருந்த குடும்பத்தினருக்கு சென்ட்ரிங் வீடு கட்டி கொடுத்து, இரண்டு சகோதரிகளையும் திருமணம் முடித்து கொடுத்து விட்டார். பெற்றோர் வெயிலில் வாடக் கூடாது என்பதற்காக ரூ.14 லட்சத்திற்கு ஏசி கார் வாங்கி கொடுத்துள்ளார்.

இதுகுறித்து சிவானந்தம் கூறும்போது:
குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு படித்து இன்று குடும்பத்தை நல்ல நிலையில் வைத்திருக்கிறார். எனக்கு உடல்நிலை சரியில்லை, வயதாகி விட்டது. வியாபாரத்திற்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தினார். இருந்த போதிலும் தற்போது வரை மீன் வியாபாரம் செய்து வருகிறேன். வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் இதய நோயாளியான நான் கஷ்டப்பட்டு விடக்கூடாது என்பதற்காக ஏசிகாரை வாங்கி கொடுத்துள்ளார். தற்போது அந்த காரில் சென்று வியாபாரம் செய்து வருகிறேன்’’ என்றார்.

The post உயர வைத்தவரின் உடல் வாடலாமா?.. வெயிலில் மீன் விற்ற தந்தைக்கு ஏசி கார் வாங்கி தந்தார் மகன்: ராமநாதபுரம் அருகே ‘மணக்கும் பாசம்’ appeared first on Dinakaran.

Related Stories: