பொதுமக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்

காஞ்சிபுரம், ஜூன் 7: காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுமக்களின் அடிப்படை தேவைகள் தீர்த்திட வேண்டும் என்ற நல்ல நோக்கில் வாரத்திற்கு ஒருநாள், காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் மற்றும் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று, துறை வாரியாக பிரித்து அம்மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கென்று தனியாக சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டு, வழங்கப்பட்ட மனுக்களை முறைப்படுத்தி அதனை முறையே கணினியில் பதிவிறக்கம் செய்யப்பட வேண்டும். இம்மனுக்கள் மீது வாரம்தோறும் ஆய்வு மேற்கொண்டு, தீர்க்க கூடிய மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும், நிதி ஆதாரத்துடன் மேற்கொள்ள வேண்டிய பணிகளை அரசின் கவனத்திற்கு எடுத்து சென்று விரைந்து முடிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக மக்கள் நல்லுறுவு மைய கூட்டரங்கில், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் மற்றும் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறும் நேற்று நடைபெற்து. இதில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமை தாங்கினார். இதில், கலெக்டர் கலைச்செல்வி மோகன் முன்னிலை வகித்தனர். அனைத்து துறை அலுவலர்கள் மாவட்டத்தில் உள்ள பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் தருகின்ற கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. இதில் முக்கியமாக சாலை வசதிகள், இடுகாடுகளுக்கு சரியான அடிப்படை வசதிகள், வீட்டுமனை பட்டாக்கள் மேலும் கொடுக்கப்பட்டுள்ள பட்டாக்களை அடங்கலில் பதிய வேண்டும். குடிநீர் வசதிகள், வடிகால் கால்வாய்கள் தூர்வரப்பட்டு சரிசெய்ய வேண்டும். மின் கம்பங்களை மாற்றப்பட வேண்டும். சில பகுதிகளில் மின்சாரம் குறைந்த மின்னழுத்த திறன் கொண்டு இருக்கிறது. அதனை சரி செய்யப்பட வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

மேலும், நமக்கு தெரியாத சில பிரச்னைகள் மற்றும் மக்களின் தேவைகளை மனுக்களாக வழங்கப்பட்டுள்ளது. அம்மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு, தேவை ஏற்படும் மனுக்களுக்கு அலுவலர்கள் நேரில் சென்று ஆய்வு செய்து, அப்பணிகளை விரைந்து முடிக்கவேண்டும் என அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார்.
அப்போது, வருவாய்த்துறை சார்பில் பெரும்புதூர் வட்டம், மதுரமங்கலம் கிராமத்தை சார்ந்த 30 பயனாளிகளுக்கும் மற்றும் காஞ்சிபுரம் வட்டம் சின்னயங்குளம் கிராமத்தை சார்ந்த 15 பயனாளிகளுக்கும் ₹65.31 லட்சம் மதிப்பீட்டில் இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டது. ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை சார்பில் உத்திரமேரூர் ஒன்றியத்தை சார்ந்த 9 பயனாளிகளுக்கு ₹21.60 லட்சம் மதிப்பீட்டில் பிரதமர் வீடு கட்டுவதற்கான ஒதுக்கீடு ஆணை, மாவட்ட தொழில் மையம் சார்பில் பல்வேறு தொழில்கள் தொடங்குவதற்கு 6 பயனாளிகளுக்கு ₹5.56 லட்சம் மதிப்பிலான வங்கி கடன் தொகைக்கான ஆணை வழங்கப்பட்டது.

மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், ₹10.01 லட்சம் மதிப்பீட்டில் 7 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு தையல் இயந்திரமும், 9 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலிகளும், கூட்டுறவுத்துறை சார்பில், ₹1,34,69,200 மதிப்பிலான 16 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு, மகளிர் சுய உதவி குழு கடன்தொகையும், தமிழ்நாடு மாநில கிராமப்புற வாழ்வாதார பணி சார்பில், ₹88,30,000 மதிப்பிலான சுயஉதவி குழு கடன்தொகையும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் ₹.16,332 மதிப்பிலான வேளாண்மை இடுபொருட்கள் 3 பயனாளிகளுக்கும் மற்றும் வேளாண் இயந்திரம் 2 பயனாளிகளுக்கும் வழங்கப்பட்டது. கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் குறித்த செயலாக்க வழிமுறைகள் அடங்கிய கையேடு உதவி வேளாண்மை அலுவலர்கள் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர்களுக்கும் வழங்கப்பட்டன.

இதனைதொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுற்றுத்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வில் சிறப்பாக பணியாற்றிய குண்ணம் ஜேப்பியர் இண்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி மற்றும் லிட்டில் பிளவர் குன்றத்தூர் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி ஆகியோர்க்கு 2022-2023க்கான பசுமை சாம்பியன் விருதும், ₹1 லட்சத்துக்கான காசோலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் எம்பி செல்வம், காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன், பெரும்புதூர் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வகுமார், மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் படப்பை மனோகரன், மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், மாநகராட்சி துணை மேயர் குமரகுருநாதன், வாலாஜாபாத் ஒன்றியக் குழுத்தலைவர் தேவேந்திரன், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post பொதுமக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: