கட்டிடத்தில் சிக்கிய பட்டத்தை எடுக்க முயன்ற போது வீட்டின் 2வது மாடியில் இருந்து தவறி விழுந்து சிறுவன் பலி: உடல் உறுப்புகள் தானம்; தந்தை உருக்கம்

சென்னை: கட்டிடத்தில் சிக்கிய பட்டத்தை எடுக்க முயன்ற போது, 13 வயது சிறுவன் 2வது மாடியில் இருந்து தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தான். அவனது கண்கள் மற்றும் உடல் உறுப்புகளை பெற்றோர் தானம் செய்தனர்.
சென்னை சூளைமேடு பாரதியார் சாலையை சேர்ந்தவர் தண்டபாணி. தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இரண்டாது மகன் பிரசன்னா (13), அருகில் உள்ள பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தான். தற்போது கோடை விடுமுறை என்பதால் பிரசன்னா நண்பர்களுடன் நேற்று முன்தினம் மாலை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தான்.

அப்போது அறுந்த பட்டம் ஒன்று இவர்களது வீட்டின் வழியாக பறந்துள்ளது. இதை கவனித்த பிரசன்னா நண்பர்களுடன் சேர்ந்து பறந்து சென்ற பட்டத்தை பின் தொடர்ந்து சென்றுள்ளான். ஒரு வழியாக சூளைமேடு பெரியார் பாதை பகுதியில் உள்ள 2 மாடி கொண்ட வீட்டின் மீது பட்டம் சிக்கியுள்ளது. உடனே பிரசன்னா பட்டத்தை எடுக்க வீட்டின் 2வது மாடியில் ஏறியுள்ளான். அப்போது காற்று பலமாக வீசியதால் பட்டம் அருகில் உள்ள மற்றொரு கட்டிடத்திற்கு சென்றது. இதனால் பிரசன்னா 2வது மாடியில் இருந்து அருகில் உள்ள மற்றொரு கட்டிடத்திற்கு தாவியதாக கூறப்படுகிறது.

இதில் தவறி விழுந்த பிரசன்னா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மயக்கமடைந்தான்.உடனே பிரசன்னாவின் பெற்றோர், உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மகனை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு பிரசன்னாவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். பின்னர் சம்பவம் குறித்து சூளைமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேநேரம், உயிரிழந்த தனது மகன் பிரசன்னா உடல் உறுப்பை தானம் செய்ய பெற்றோர் முன் வந்தனர்.

அதன்படி பிரசன்னாவின் இரண்டு கண்கள் மற்றும் உடலின் முக்கிய உறுப்புகள் பெற்றோர் சம்மதத்துடன் தானம் செய்யப்பட்டது. அப்போது உயிரிழந்த பிரசன்னாவின் தந்தை தண்டபாணி கூறுகையில், ‘‘குழந்தைகளை பெற்றோர் அரவணைப்போடு பார்த்துக்கொள்ள வேண்டும். எனது மகனுக்கு நடந்தது போல் வேறு யாருக்கும் நடக்க கூடாது. என் மகன் இறந்த சோகத்தை எங்களால் மறக்க முடியவில்லை. எனவே மகன் இறந்தாலும், அவன் கண்கள் மற்றும் உடல் உறுப்பு தானம் செய்தது மூலம் அவனை நாங்கள் உயிருடன் பார்க்கிறோம். எங்களுக்கு வந்த இந்த நிலைமை வேறு யாருக்கும் நடக்க கூடாது’’ என்று கண்ணீர் மல்க கூறினார்.

The post கட்டிடத்தில் சிக்கிய பட்டத்தை எடுக்க முயன்ற போது வீட்டின் 2வது மாடியில் இருந்து தவறி விழுந்து சிறுவன் பலி: உடல் உறுப்புகள் தானம்; தந்தை உருக்கம் appeared first on Dinakaran.

Related Stories: