வேதாரண்யம் பகுதியில் 7 செ.மீ மழை 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி பாதிப்பு

வேதாரண்யம்: வேதாரண்யம் பகுதியில் ஒரே நாள் இரவில் 7 செ.மீ மழை கொட்டியதால் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் ஆகிய பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெற்று வருகிறது. ஜனவரி முதல் செப்டம்பர் வரை இப்பகுதியில் உப்பு உற்பத்தி நடைபெறும். ஆண்டு ஒன்றுக்கு 6 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 10ஆயிரம் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பு தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு தினமும் லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகிறது. ஜனவரி மாதம் தொடங்கிய உப்பு உற்பத்தி, இந்தாண்டு கோடை மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டது கடந்த 1 மாதமாக கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் உப்பு உற்பத்தி முழுவீச்சில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் திடீரென்று நேற்றுமுன்தினம் இரவு கோடை மழை கொட்டித்தீர்த்தது. வேதாரண்யம் பகுதியில் ஒரே நாள் இரவில் 7செ.மீ மழை பதிவானது. இதனால் மழைநீர் தேங்கி உப்பு பாத்திகள் சேதமடைந்து 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. உப்பளங்களில் சேமித்து வைத்திருந்த உப்பும், மழை நீரில் கரைந்து வீணானது. மழை நீரை மோட்டார் மூலம் வெளியேற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். மீண்டும் உப்பு உற்பத்தி துவங்க ஒரு வாரமாகும் என உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர். உப்பு உற்பத்தி முழுவீச்சில் நடைபெற்று வந்த அப்பகுதி தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது.

The post வேதாரண்யம் பகுதியில் 7 செ.மீ மழை 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி பாதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: