டெல்டா மாவட்டங்களில் இடி, மின்னல், காற்றுடன் கன மழை: உப்பு உற்பத்தி பாதிப்பு

திருச்சி: தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு இடி மின்னலுடன் மழை பெய்தது. நாகையில் நேற்றிரவு 9 மணி முதல் 9.30 மணி வரை பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்தது. கீழ்வேளூர், வேதாரண்யம், கோடியக்கரை, கோடியக்காடு, அகஸ்தியன்பள்ளி, ஆயக்காரன்புலம், கரியாப்பட்டினம், தலைஞாயிறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 10 மணியிலிருந்து 12.30 மணி இடி, மின்னல், பலத்த காற்றுடன் மழை பொழிந்தது. இந்த மழையால் அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடிநெல்வயல் ஆகிய பகுதியில் உப்பளங்களில் மழைநீர் தேங்கியதால் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது. திருவாரூர், நீடாமங்கலம், மன்னார்குடி, திருமக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இரவு 8 மணி அளவில் இடி, மின்னலுடன் கனமழை கொட்டியது. இதனால் மின்சாரம் தடைப்பட்டது. ஆங்காங்கே மரங்கள் சாய்ந்து விழுந்தன. ரோடுகளில் தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. 2 மணிநேரம் பெய்த இந்த கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியானது.

பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் மாலை 5.30 மணியளவில் பல்வேறு இடங்களில் பலத்த காற்று வீச தொடங்கியது. அதனை தொடர்ந்து சிறிது நேரம் மழை பெய்தது. இதேபோல் இரவு 9 மணியளவில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை மீண்டும் பெய்தது. பின்னர் விட்டு, விட்டு மழை பொழிந்தது.
கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மாலை அரை மணி நேரம் காற்றுடன் கனமழை பெய்தது. தஞ்சையில் நேற்றிரவு 7.45 மணி அளவில் இடி மின்னலுடன் 1 மணி நேரம் இடைவிடாது மழை கொட்டியது. பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நனைந்தபடி சென்றனர். வல்லம், திருக்காட்டுப்பள்ளி, பூதலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் இரவு 7.30 மணி அளவில் பலத்த இடி, மின்னலுடன் கனமழை பெய்தது.

மழையால் அப்பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்பட்டது. திருக்காட்டுப்பள்ளி கடைவீதியில் மின்கம்பத்தில் இருந்து ஒரு கடைக்கு செல்லும் மின்சார ஒயர் அறுந்து தொங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கும்பகோணத்தில் நேற்று இரவு 8 மணி அளவில் இடியுடன் பெய்ய தொடங்கிய மழை இரவு 10 மணி வரை நீடித்தது. தஞ்சை மாவட்டத்தில் தற்போது விவசாயிகள் குறுவை சாகுபடிக்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் மழை பெய்து வருவது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மழை அளவு விபரம்(மி.மீ): நாகை 42, திருப்பூண்டி 8, வேளாங்கண்ணி 13, தலைஞாயிறு 5, வேதாரண்யம் 63, கோடியக்கரை 59, திருக்குவளை 8, தஞ்சை 19, வல்லம் 23, கருங்குளம் 30.6, திருவையாறு 39, பூதலூர் 102.6, திருக்காட்டுப்பள்ளி 69, நெய்வாசல் தென்பாதி 39, கும்பகோணம் 35, அய்யம்பேட்டை 22, திருவிடைமருதூர் 33.6 மஞ்சலாறு 27.6, அதிராம்பட்டினம் 22.

The post டெல்டா மாவட்டங்களில் இடி, மின்னல், காற்றுடன் கன மழை: உப்பு உற்பத்தி பாதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: