கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு மண்ணெண்ணெய் பாட்டிலுடன் மனு அளிக்க வந்த பெண்ணால் பரபரப்பு

கோவை : கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு மண்ணெண்ணெய் பாட்டிலுடன் மனு அளிக்க வந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.கோவை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் கிராந்திகுமார் பாடி தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமானோர் தங்களது கோரிக்கைகளை மனுவாக அளித்தனர். இதில், மக்கள் பசுமை இயக்கம் சார்பில் அளித்த மனுவில், ‘‘உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு முழுவதும் எங்களது பசுமை இயக்கத்தை சேர்ந்தவர்கள் துண்டு பிரசுரங்களை வழங்கி பொதுமக்களுக்கு மரம் நடுவதை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.

இந்த நிலையில் கோவை உக்கடம் பகுதியில் இருந்து பொள்ளாச்சி செல்வதற்கான தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் இருந்த பெரிய மரங்கள் வெட்டி எடுக்கப்பட்டு சாலை அமைக்கப்பட்டது. ஆனால் அவ்வாறு சாலை அமைக்கப்பட்ட பிறகும் சாலையின் இருபுறமும் மக்களுக்கு பயன் தரும் வகையில் மரங்களை நடுவதற்கு மாவட்ட நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் நாங்கள் எங்களால் முடிந்தவரை எங்கள் இயக்க உறுப்பினர்களை வைத்து ஆங்காங்கே மரங்களை நட்டு வருகிறோம்.

இந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் கோவை உக்கடம் முதல் பொள்ளாச்சி வரையில் உள்ள தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் மக்களுக்கு பயன் தரும் வகையில் மரங்களை நடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கும் நிலையில் மரங்களை நடுவதற்கான முழு ஒத்துழைப்பையும் எங்களது பசுமை மக்கள் இயக்கம் வாயிலாக செய்ய தயாராக இருக்கிறோம். எனவே மாவட்ட கலெக்டர், நாட்டினை பசுமையாக்க முயன்று வரும் எங்களுக்கு உதவி செய்ய வேண்டும்’’ என கூறி இருந்தனர்.

கோவை புலியகுளம் பகுதியை சேர்ந்த சுல்தான் என்ற பெண் ஒருவர் கலெக்டரிடம் மனு அளிக்க வந்தார். அவரை போலீசார் கலெக்டர் அலுவலகம் நுழைவு வாயில் முன்பு பரிசோதனை செய்தனர். அப்போது அவர் தண்ணீர் பாட்டிலில் மண்ணெண்ணெய் வைத்து இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து மண்ணெண்ணெய் பாட்டிலை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பின்னர், அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், சுல்தான் கோவை புலியகுளம் பகுதியில் ரூ.3.65 லட்சத்திற்கு போக்கியத்திற்கு வீடு எடுத்து தங்கி இருப்பதாகவும், பணம் அளித்த வீட்டின் உரிமையாளர் உயிரிழந்த நிலையில் வீட்டை காலி செய்ய அவரின் உறவினர்கள் கூறுவதாகவும், பணத்தை திரும்ப தர முடியாது வீட்டை உடனே காலி செய்ய வேண்டும் என கூறுவதாகவும் தெரிவித்தார். அவரை போலீசார் சமாதானம் செய்தனர்.

இதனால் கலெக்டர் அலுவலகம் முன்பு சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. சூலூர் மயிலம்பட்டி பகுதியை சேர்ந்த திருநங்கைகள் 6 பேர் கலெக்டரிடம் அளித்த மனுவில், ‘‘மயிலம்பட்டி பகுதியில் ஆடு, மாடு, கோழி வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறோம். எங்கள் இடத்தை அபகரிக்க சிலர் முயன்று வருகின்றனர். அவர்கள் எங்கள் வீட்டை உடைத்து, 120 கோழிகள் கொன்று, பாலியல் ரீதியாக தொல்லை அளித்து வருகின்றனர். எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். சம்மந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என கூறியிருந்தனர்.

The post கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு மண்ணெண்ணெய் பாட்டிலுடன் மனு அளிக்க வந்த பெண்ணால் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: