இந்திய அளவில் தரவரிசை பட்டியலில் மாநில அரசு ஆஸ்பத்திரிகளில் சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை முதலிடம் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்

நெல்லை, ஜூன் 6: இந்திய அளவில் மாநில அரசுகள் நடத்தும் மருத்துவமனைகளில் சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு பட்டியலில் முதலிடத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளது என நெல்லையில் நடந்த விழாவில் மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார். நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செயல்படும் கேன்சர் மையத்தில் புற்றுநோயை துல்லியமாக கண்டறியும் வகையில் ரூ.12 கோடியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பெட் ஸ்கேன் சென்டர் திறப்புவிழா மற்றும் ரூ. 23 கோடியே 75 லட்சம் மதிப்பீட்டில் அதிதீவிர சிகிச்சை மையத்துக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. விழாவுக்கு சபாநாயகர் அப்பாவு தலைமை வகித்தார். சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், பெட் ஸ்கேன் இயந்திரத்தை திறந்து வைத்து, அதிதீவிர சிகிச்சை பிரிவு கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டி பேசியதாவது: நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை மேம்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

மதுரைக்கு அடுத்தபடியாக கேன்சர் நோயை கண்டறியும் பெட் ஸ்கேன் சென்டர் நெல்லையில் திறக்கப்பட்டுள்ளது. இதனால் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்ட மக்கள் பயனடைவார்கள். இனி மதுரைக்கு செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. இதற்கு கட்டணமாக ரூ.11 ஆயிரம் வசூலிக்கப்படும். முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டம் வைத்திருப்பவர்களுக்கு இலவசமாக ஸ்கேன் எடுக்க வேண்டும் என சபாநாயகர் அப்பாவு கேட்டு கொண்டதின் பேரில் அதுகுறித்து பரீசிலிக்கப்படும். தற்போது இங்கு அதிதீவிர சிகிச்சைக்காக பல்வேறு சிறப்பு வசதிகளுடன் கூடிய 20 படுக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. 35 அரசு மருத்துவமனைகள், 18 மாவட்ட மருத்துவமனைகள், 139 வட்டார மருத்துவமனைகளில் ரூ.364 கோடியே 22 லட்சம் செலவில் மேம்படுத்தும் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்துள்ளார். மேலும் நெல்லையில் நரம்பியல் மருத்துவ சிகிச்சை பிரிவும் ரூ.80 கோடியில் விரைவில் துவங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மேம்படுத்தப்படும். இத்தகைய கட்டமைப்பு வசதிகளுடன் தரமான சிகிச்சை அளிக்கப்படுவதால் பணக்காரர்கள் கூட அரசு மருத்துவமனையை நாடிவருகின்றனர். சேலம், கோவை, மதுரையில் ‘பே வார்டு’ செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் சேலம், மதுரையில் ‘பே வார்டு’ செயல்பட துவங்கி உள்ளது. அதுபோல் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் பே வார்டு துவங்க நடவடிக்கை எடுக்கப்படும். இங்கு ரூ. 6 கோடியில் குழந்தைகள் பராமரிப்பு பிரிவுக்கான கட்டுமான பணி விரைவில் நிறைவடையும். மேலும் ஒன்றிய, மாநில அரசு உதவியுடன் ரூ.72 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் இதயம், கல்லீரல் மருத்துவ சிகிச்சைக்கான கட்டுமானப் பணிகள் நடந்து வருகிறது. இந்தப் பணிகள் 2024 நவம்பரில் பணிகள் முடிவடையும். இந்தியா முழுவதும் 680 அரசு, மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகள் உள்ளன. இதில் 171 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளின் செயல்பாடு மற்றும் தரவுகளை ஆய்வு செய்தது தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு. இந்த ஆய்வுகளின் அடிப்படையில் மாநில அரசுகளின் மருத்துவமனைகளில் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதலிடம் பிடித்துள்ளது தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் பிற்பட்டோர் நலத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், சுகாதாரத் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி, கலெக்டர் கார்த்திகேயன், ஞானதிரவியம் எம்பி, எம்எல்ஏக்கள் அப்துல்வஹாப், நயினார் நாகேந்திரன், மேயர் பிஎம் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி, மருத்துவக் கல்வி இயக்குனர் சாந்திமலர், நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் ரேவதி, சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் லதா, மாவட்ட ஊராட்சி தலைவர் ஜெகதீஷ், முன்னாள் எம்எல்ஏ மாலைராஜா, பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன், மாவட்ட விளையாட்டு ேமம்பாட்டு அணி அமைப்பாளர் பலராமன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

தொடர்ந்து முன்னேற்றம்
தர வரிசை பட்டியல் ஒன்றிய அரசின் கல்வித் துறையின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் இந்திய அளவில் அனைத்து துறை கல்வி நிறுவனங்களும் பல்வேறு தரவுகளின் அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. இந்த பட்டியலில் அனைத்து வகையான மருத்துவமனைகளிலும் (ஒன்றிய அரசு, மாநில அரசு) சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை அகில இந்திய அளவில் 11ம் இடம் பிடித்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளை ஒப்பிடுகையில் 2021ம் ஆண்டு 16ம் இடத்திலும், 20222ம் ஆண்டு 12ம் இடத்திலும் இருந்து இந்த ஆண்டு 11ம் இடத்திற்கும் முன்னேற்றம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் இந்தியா முழுவதும் மாநில அரசுகள் நடத்தும் மருத்துவமனைகளில் சென்னை ராஜிவ்காந்தி முதலிடம் பிடித்துள்ளது.

The post இந்திய அளவில் தரவரிசை பட்டியலில் மாநில அரசு ஆஸ்பத்திரிகளில் சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை முதலிடம் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: