வெளியூர்களிலிருந்து வரும் பேருந்துகளை திருவள்ளூர் ரயில் நிலையம் வரை இயக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

திருவள்ளூர்: வெளியூர்களிலிருந்து வரும் பேருந்துகளை திருவள்ளூர் ரயில் நிலையம் வரை இயக்கவும், கூடுதல் அரசு பேருந்துகளை இயக்கவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத் தலைநகரில் உள்ள திருவள்ளூர் ரயில் நிலையத்திற்கு நாள்தோறும் 180 புறநகர் மின்சார ரெயில்களும், 22 எக்ஸ்பிரஸ் ரெயில்களும் வந்து, நின்று செல்கின்றன. திருவள்ளூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் வசிக்கும் ஏராளமான மக்கள் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்பவர்கள், வேலைக்கு மற்றும் அன்றாட பணிகளுக்கு செல்பவர்கள் ரயில்களையே நம்பி உள்ளனர்.

இங்கு, நாள்தோறும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் திருவள்ளூர் ரயில் நிலையத்தை பயன்படுத்துகிறார்கள். திருவள்ளூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்தவர்கள் தாங்கள் வாழும் பகுதியிலிருந்து பேருந்து மூலம் திருவள்ளூர் பேருந்து நிலையத்திற்கு வந்து, அங்கிருந்து திருவள்ளூர் ரயில் நிலையத்திற்கு செல்ல ஆட்டோ அல்லது தனியார் பேருந்துகளை பயன்படுத்த வேண்டி உள்ளது. திருவள்ளூர் ரயில் நிலையத்திற்கும், திருவள்ளூர் பஸ் நிலையத்திற்கும் சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. ரயில் நிலையத்திலிருந்து டி1 என்ற அரசுப் பேருந்து இயங்கி வந்தது.

இந்நிலையில், கொரோனா காலக்கட்டத்தில் நிறுத்தப்பட்டது. அதனால் ஒரு சில தனியார் பேருந்துகள் மட்டுமே திருவள்ளூர் ரயில் நிலையத்திற்கு வந்து செல்கிறது. இதனால் பொதுமக்கள் பேருந்துக்காக காத்திருக்காமல் ஆட்டோவில் செல்லக்கூடிய நிலையே உள்ளது. தற்போது திருவள்ளூர் அடுத்த வேடங்கிநல்லூரில் ரூ.33 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் விரைவில் அமைக்கப்பட உள்ளது. தற்போது, திருத்தணி ஊத்துக்கோட்டை, பூண்டி, பேரம்பாக்கம், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து இயக்கப்படும் அனைத்து பேருந்துகளும் திருவள்ளூர் பேருந்து நிலையத்திற்கே வந்து செல்கின்றன.

இதனால் அங்கிருந்து ரயில் நிலையம் செல்லவேண்டியவர்கள் வேறொரு பஸ் மூலமாகவோ அல்லது ஆட்டோவிலோ செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இயக்கப்படும் அனைத்து பேருந்துகளும் திருவள்ளூர் ரயில் நிலையம் வரை இயக்கினால் பயணிகள் சிரமம் இல்லாமல் செல்வதற்கு ஏதுவாக இருக்கும். மேலும், ரயில் நிலையத்தின் அருகே உள்ள பேருந்து நிலையத்தில் 20க்கும் மேற்பட்ட பேருந்துகளை நிறுத்தி வைக்க முடியும் என்பதால் திருத்தணி, கும்மிடிப்பூண்டி மற்றும் பொன்னேரியில் இருந்து வரும் புறநகர் பேருந்துகளையும் திருவள்ளூர் பேருந்து நிலையத்திற்கு பதிலாக திருவள்ளூர் ரயில் நிலையத்திற்கு இயக்கலாம் என பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

அதே நேரத்தில் திருவள்ளூர் ரயில் நிலையத்திலிருந்து 6 கி.மீ. தூரத்தில் வேடங்கிநல்லூரில் 5 ஏக்கர் பரப்பளவில் புதிய பேருந்து நிலையம் அமைக்க இருப்பதால், பொது மக்கள் மேலும் சிரமத்திற்கு ஆளாக வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே விரைவில் அமைக்கப்பட உள்ள புதிய பேருந்து நிலையத்திலிருந்து திருவள்ளூர் ரயில் நிலையத்திற்கு அரசுப் பேருந்துகளை அதிகளவில் இயக்க வேண்டும் என பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

The post வெளியூர்களிலிருந்து வரும் பேருந்துகளை திருவள்ளூர் ரயில் நிலையம் வரை இயக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: