எஸ்.சி., மற்றும் எஸ்.டி. பிரிவினருக்கு உதவும் வகையில் வன்கொடுமை புகார் அளிக்க வருகிறது ‘உதவி மையம்’: சட்ட ஆலோசனை, உள்கட்டமைப்பு வசதிக்கும் ஏற்பாடு

எஸ்.சி., மற்றும் எஸ்.டி. பிரிவினருக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்து புகார் அளிக்க ‘‘உதவி மையம்’’ இம்மாதம் இறுதியில் செயல்பாட்டிற்கு வர உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பழங்குடியின மக்கள் சமூக, கல்வி மற்றும் பொருளாதார நிலையில் முன்னேற்றமடைய அப்போதைய முதல்வராக இருந்த கலைஞர் 2007ம் ஆண்டு ஆதிதிராவிட நலத்துறை அமைச்சரை தலைவராக கொண்டு, ஆதிதிராவிடர் நல வாரியம் ஏற்படுத்தினார். அதன் மூலமாகத்தான், எஸ்.சி., மற்றும் எஸ்.டி. பிரிவினர் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டு அரசு வழங்கும் நலத்திட்டங்கள் பயனாளிகளுக்கு கொண்டு போய் சேர்க்கப்பட்டது. ஆனால், பின்னர் வந்த ஆட்சியில் அடுத்த 10 ஆண்டுகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கான பல்வேறு கோரிக்கைகள் கண்டுகொள்ளாமல் விடப்பட்டன.

இதன்பின்னர், புதிதாக பொறுப்பேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான சட்டப்பூர்வமான உரிமைகளை பாதுகாத்திடவும், அவர்களின் முக்கிய பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையிலும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, கடந்த இரண்டு ஆண்டுகளில் பல அறிவிப்புகளை வெளியிட்டது மட்டுமின்றி, அவை நிறைவேற்றப்பட்டும் வருகிறது. அதன்படி, தமிழ்நாடு மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் உருவாக்கம், தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர்கள் என பட்டியலிடப்பட்டுள்ள குடும்பன், பள்ளன், தேவேந்திர குலத்தான், கடையன், பண்ணாடி, காலாடி மற்றும் வாதிரியான் ஆகிய ஏழு சாதிகளையும் ஒன்றாக இணைத்து ஒரே பெயரில் தேவேந்திரகுல வேளாளர் என்று அழைப்பது தொடர்பாக அரசாணை, வன்கொடுமையால் பாதிக்கப்பட்டோரை சமுதாயக் கண்ணோட்டத்துடன் அணுகி முறையான நிவாரணம், வளமான எதிர்காலத்திற்கான உத்தரவாதம் ஆகியவற்றை வழங்குவதற்கு காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு ‘‘சமத்துவம் காண்போம்’’ என்ற தலைப்பில் விழிப்புணர்வு பயிற்சிகள், தமிழ்நாடு தூய்மைப்பணியாளர் நல வாரியம், பழங்குடியினர் நலவாரியம், புதிரை வண்ணார் நல வாரியம் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

இந்தியாவை பொறுத்தவரை வன்கொடுமைகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மீது கட்டவிழ்த்து விடப்படுவது தொடர்கதையாகி வருகின்றன. தீண்டாமை மற்றும் வன்கொடுமைகளுக்கு எதிராக குடிமையியல் உரிமைகள் பாதுகாப்பு சட்டம், வன்கொடுமை தடுப்பு சட்டம், வன்கொடுமை தடுப்பு விதிகள் ஆகிய சட்டங்கள் இந்திய அரசால் இயற்றப்பட்டு, அவை தமிழ்நாட்டிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் வன்கொடுமைகள் தொடர்ந்து நிகழ்ந்துவரக்கூடிய அவலநிலை என்பது இன்றளவும் உள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை வன்கொடுமை நிகழ்வுகளை தடுப்பதற்கென ஒரு காவல்துறை இயக்குநர், காவல்துறை உதவித் தலைவர் மற்றும் மாவட்ட அளவில் 31 காவல் துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் 7 காவல் உதவி ஆணையர்கள் மேற்பார்வையில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவுகள் கண்காணித்து வருகின்றன.

அதேபோல, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் மற்றும் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய தீருதவிகள் மற்றும் மறுவாழ்வு தொடர்பான வழக்குகளை விரைந்து முடிக்க ஏதுவாக திருச்சி, தஞ்சை, மதுரை, நெல்லை, விழுப்புரம், சிவகங்கை, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர் (ஸ்ரீவில்லிபுத்தூர்), புதுக்கோட்டை கடலூர், நாமக்கல், தேனி, திருவண்ணாமலை, பெரம்பலூர், வேலூர், தூத்துக்குடி, கன்னியாகுமரி (நாகர்கோவில்), செங்கல்பட்டு, திருப்பூர், திருவாரூர், கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் 22 தனியுறு சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் நிலுவையில் உள்ள சேலம், கிருஷ்ணகிரி, மதுரை மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்களில் கூடுதலாக நான்கு புதிய தனியுறு சிறப்பு நீதிமன்றங்கள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு முதற்கட்டமாக சேலத்தில் ஒரு புதிய தனியுறு நீதிமன்றமும் தொடங்கப்பட்டுள்ளது.

அதேபோல, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பொதுமக்களிடையே தீண்டாமைக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, ஆண்டுதோறும் ஜனவரி 24ம் தேதி முதல் 30ம் தேதி வரை ‘‘மனிதநேய வார விழா’’ நடத்தப்படுகிறது. மேலும், ஜனவரி 26, ஆகஸ்ட் 15 மற்றும் அக்டோபர் 2 ஆகிய நாட்களில் சமத்துவ விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதேபோல, தீண்டாமை கடைபிடிக்கப்படாமல் பொதுமக்கள் அனைவரும் நல்லிணக்கத்துடன் வாழும் கிராமங்கள் தமிழ்நாட்டின், அனைத்து மாவட்டங்களிலும் (சென்னை தவிர்த்து) தேர்ந்தெடுக்கப்பட்டு, அக்கிராமங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரும் பொருட்டு தமிழ்நாடு அரசால் ரூ.10 லட்சம் நிதி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்தாண்டு இதன் மூலம் 37 மாவட்டங்களில் உள்ள 37 கிராமங்கள் பயனடைந்துள்ளன. இந்தாண்டு ரூ.8.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 70 கிராமங்களில் வளர்ச்சி பணிகள் நடந்து வருகின்றன.

வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு, கொலை, இறப்பு, பாலியல் துன்புறுத்தல் போன்ற குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு விதிகளின்படி, அரசு வேலை, ஓய்வூதியம் வீட்டுவசதி போன்ற இதர மறுவாழ்வு குறித்த நிவாரண உதவிகளும் அரசால் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, கடந்த 2020-22 வரை காலகட்டங்களில் வேலைவாய்ப்பு 199 பேருக்கும், ஓய்வூதியம் 392 பேருக்கும், வீட்டுமனைப்பட்டா 72 பேருக்கும் மற்றும் கல்வி உதவி 60 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளன.

அதேபோல, ஆதிதிராவிடர் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் போது வன்கொடுமை நிகழ்ந்த கிராமங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகின்றன. ஒடுக்கப்பட்ட மக்கள் மீது நடத்தப்படும் வன்கொடுமைகளை தடுக்கும் விதமாக அரசு எடுத்து வரும் திட்டங்கள் வெறும் அறிவிப்புகளாக மட்டுமில்லாமல் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில் தான், இந்தாண்டுக்கான 2023-24ம் ஆண்டிற்கான ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானியக்கோரிக்கையில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார். அதில் முக்கியமாக பார்க்கப்படும் அறிவிப்பாக, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்த புகார் அளிக்கவும், சட்ட ஆலோசனைகள் வழங்கவும் தொழில்நுட்ப வசதியுடன் கூடிய உதவி மையம் ஏற்படுத்தப்படும் என அறிவித்தார். அதன்படி, அதற்காக ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

இதுகுறித்து, சிறப்பு உதவி மையம் குறித்து, தினகரன் நாளிதழுக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் லட்சுமி பிரியா அளித்த சிறப்பு ேபட்டி:
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமைகள் நிகழ்ந்துதான் வருகின்றன. இதை தடுக்கும் விதமாகவும், பாதிக்கப்படுபவர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கவும் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படும் நபர்களுக்காக தொழில்நுட்ப வசதியுடன் கூடிய உதவி மையம் ஏற்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், விரைவில் ‘‘ஹெல்ப் டெஸ்க்’’ என்று சொல்லக்கூடிய உதவி மையத்தை ஏற்பாடு செய்ய முடிவு செய்யப்பட்டு செயல்பாட்டிற்கு வர உள்ளது. இந்த உதவி மையம் குறிப்பாக, ஒருவர் துன்புறுத்தப்படும் பட்சத்தில், அவர் எங்கே செல்வது என்பது குறித்து அறியாதவராக இருக்கலாம் அல்லது புகார் அளிக்க பயப்படலாம். அவர்களுக்காக உருவாக்கப்பட்டதே.

இதன் மூலம் பாதிக்கப்பட்டவர் தொலைபேசி வாயிலாக உதவி மையத்தை தொடர்பு கொண்டு தங்களுக்கு இழைக்கப்பட்ட வன்கொடுமைகள் குறித்து தெரிவிக்கலாம். அதன் மூலம் அவர்களது புகார் பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட மாவட்டத்தை சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மாவட்ட துணை கண்காணிப்பாளர் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்வார். பாதிக்கப்பட்டவர் புகாரை முழுவதுமாக விசாரணை நடத்தி உண்மை தன்மை கண்டறிந்து அதன் பிறகு உண்மையாகவே பாதிக்கப்பட்டார் என தெரியவந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல, பாதிக்கப்பட்டவர்களுக்கான சட்ட ஆலோசனைகளை பெற நாங்கள் வழக்கறிஞரை நியமித்துள்ளோம். அதன்படி, அவர்களின் அறிவுரைகளின்படி வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டவர் நீதிமன்றத்தை நாடலாம். மேலும், புகார் அளிப்பவர்களின் விவரங்கள் கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளனவா? என்பது குறித்து ஆய்வும் மேற்கொள்வோம். இவ்வாறு அவர் கூறினார்.

430 வன்கொடுமை கிராமங்கள்
கடந்த 2022ம் ஆண்டு தமிழ்நாட்டில் 430 கிராமங்கள் வன்கொடுமை நிகழ்ந்த கிராமங்களாக அடையாளம் காணப்பட்டு அதனை மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. மேம்பாட்டு பணிகளுக்காகவே ஆண்டுதோறும் ₹100 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது.

விரைவில் எண்கள் அறிவிப்பு
சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட உள்ள இந்த உதவி மையத்திற்கான கட்டணமில்லா எண்கள் இம்மாதம் அறிவிக்கப்படுகிறது. அதேபோல, மின்னஞ்சல் மூலமாகவும், ஆன்லைன் மூலமாகவும் புகார்களை பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

The post எஸ்.சி., மற்றும் எஸ்.டி. பிரிவினருக்கு உதவும் வகையில் வன்கொடுமை புகார் அளிக்க வருகிறது ‘உதவி மையம்’: சட்ட ஆலோசனை, உள்கட்டமைப்பு வசதிக்கும் ஏற்பாடு appeared first on Dinakaran.

Related Stories: