கனரக வாகனம், மினி வேன்களில் தொழிலாளர்கள் ஆபத்து முறையில் பயணம்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

புழல்: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள கனரக வாகனங்கள் குறிப்பாக லோடு ஏற்றும் மினி வேன்களில் கூலி தொழிலாளர்கள் அமர்ந்து சென்று வருகின்றனர். இதனால் பல நேரங்களில் விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகிறது. சென்னை கோயம்பேடு மார்க்கெட் மற்றும் பாரிமுனை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து காய்கறி மற்றும் பொருட்களை ஏற்றி வருகின்ற வாகனங்களிலும், சென்னை பகுதியில் மழைநீர் கால்வாய் பணி மற்றும் பல்வேறு கட்டிடப் பணிகளில் ஈடுபட்டு வரும் வடமாநில தொழிலாளர்கள் பல்வேறு இடங்களில் தங்கிருந்து பணிகளுக்கு வேன் மூலம் சென்று வருகின்றனர்.

இதனால் பல நேரங்களில் ஓட்டுநர்கள் பிரேக் அடிக்கின்ற போது விபத்துக்கள் ஏற்பட்டு பலர் படுகாயமும், பல உயிரிழப்புகளும் நடக்கிறது. இதுகுறித்து பலமுறை தமிழகத்தின் சட்ட ஒழுங்கு போலீசும், அந்தந்த பகுதி வட்டார போக்குவரத்து போலீசாரும், போக்குவரத்து அலுவலர்களும் பலமுறை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தியும், அறிவிப்புகள் செய்தும், அபராதம் விதித்தும் வருகின்றனர். கனரக வாகனம் மற்றும் லோடு ஏற்றும் வாகனங்களில் ஓட்டுநர் தவிர்த்து அதில் பயணித்து வரும் பொது மக்கள் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தாலோ, இறந்து போனாலோ இன்சூரன்ஸ் கிடையாது என கூறப்படுகிறது.

எனவே, சம்பந்தப்பட்ட பல்வேறு பகுதிகளில் குறிப்பாக புழல், செங்குன்றம், சோழவரம் ஆகிய பகுதிகளில் சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில், காலை மற்றும் மாலை நேரங்களில் வாகன சோதனை நடத்தி ஆபத்தான முறையில் வேன் மூலம் பயணம் செய்யும் பொது மக்கள், தொழிலாளர்களை எச்சரித்தும், அவர்களை ஏற்றிச் செல்லும் வாகன ஓட்டுனர்களுக்கு அதிக படியான அபராத தொகை விதித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி தொடர்ந்து நடவடிக்கை எடுத்தால் இது போன்ற செயல்கள் தடுக்கப்படும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

The post கனரக வாகனம், மினி வேன்களில் தொழிலாளர்கள் ஆபத்து முறையில் பயணம்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: