வெளிநாட்டை சேர்ந்த மாணவர்கள் இல்லாததால் கல்வி நிறுவன தர வரிசை பட்டியலில் முதல் இடத்தை இழக்கிறோம்: மாநிலக் கல்லூரி முதல்வர் தகவல்

சென்னை: வெளிநாட்டை சேர்ந்த மாணவர்கள் அதிக அளவில் கல்லூரியில் படிக்காத காரணத்தினால் தான் தேசிய தர வரிசை பட்டியலில் சென்னை மாநிலக் கல்லூரி முதலிடத்தை இழந்துள்ளது என அதன் முதல்வர் ராமன் தெரிவித்துள்ளார். மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பானது நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களின் கற்றல், கற்பித்தல், வளங்கள், ஆராய்ச்சி, தொழில் முறை நடைமுறைகள், பட்டப்படிப்பு முடிவுகள், உணர்வுகள் ஆகியவற்றை உள்ளடக்கி தரவரிசை பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.

ஒட்டு மொத்த பல்கலைக்கழகம், கல்லூரி, ஆராய்ச்சி நிறுவனம், இன்ஜினியரிங், மேலாண்மை, பார்மசி, மருத்துவம், பல் மருத்துவம், சட்டம், கட்டிடம் என பல்வேறு பிரிவுகளில் சிறந்த நிறுவனங்களின் தரவரிசையை வெளியிடுகிறது. இந்நிலையில், ‘என்.ஐ.ஆர்.எப்-2023 தரவரிசை பட்டியலை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டு இருக்கிறது. அதில் சிறந்த கல்லூரிகளின் தரவரிசையில் சென்னை மாநிலக் கல்லூரி கடந்த ஆண்டைப்போலவே இந்தாண்டும் 3-வது இடத்தை தக்கவைத்துள்ளது.

இது குறித்து மாநிலக் கல்லூரி முதல்வர் ராமன் கூறுகையில், ‘‘ இந்திய அளவில் முதல் 2 இடத்தைப்பெற்றுள்ள கல்லூரிகள் டெல்லியில் உள்ளன. அங்கு பல நாடுகளை சேர்ந்த மாணவர்கள் படிக்கின்றனர். இதனால், அவை அனைத்து வகையிலும் முதல் இடங்களைப் பெறுகின்றன. நமது கல்லூரியில் இந்த ஆண்டுதான் ஓமன் நாட்டை சேர்ந்த ஒரு மாணவி ஆங்கில பட்டப்படிப்பை தேர்வு செய்துள்ளார். பல ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வரும் நமது மாநிலக் கல்லூரி, உட்கட்டமைப்பு வசதிகளை அதிகரித்துள்ள காரணத்தால் தனது இடத்தை மீண்டும் தக்க வைத்துள்ளது.

இது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. 2 ஆயிரம் மாணவர்கள் ஒரே நேரத்தில் அமரக்கூடிய கலைஞர் அரங்கம், மாற்று திறானாளி மாணவர்கள் இளநிலையில் 227 பேர், முதுநிலையில் 50 பேர், பார்வையற்றவர்கள் 90 பேர் கல்லூரியில் படிக்கிறார்கள். இவர்களுக்கென தனி விடுதி வசதிகள் என அனைத்தையும் தமிழ்நாடு அரசு செய்து வருகிறது. மேலும் 4 திருநங்கைகளும் படிக்கின்றனர். மேலும், 5 தமிழ்நாடு முதலமைச்சர்களும், 3 பாரத ரத்னா விருதுகளை பெற்றவர்களும் மாநிலக் கல்லூரியில்தான் படித்துள்ளனர். தற்போது அனைத்து வகையிலும் தரம் உயர்த்தி வரும் மாநிலக் கல்லூரி விரைவில் முதல் இடத்தை அடையும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post வெளிநாட்டை சேர்ந்த மாணவர்கள் இல்லாததால் கல்வி நிறுவன தர வரிசை பட்டியலில் முதல் இடத்தை இழக்கிறோம்: மாநிலக் கல்லூரி முதல்வர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: