அருப்புக்கோட்டையில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை: 100 மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் சூறாவளி காற்றுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்தது. சூறைக்காற்றுக்கு 100க்கும் மேற்பட்ட மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக 100 டிகிரிக்கு மேலான வெயில் நிலவியது. நேற்று பிற்பகல் 4 மணியளவில் அருப்புக்கோட்டையில் பயங்கர இடி, மின்னலுடன் மழை பெய்தது. சிறிது நேரத்திலேயே கடும் சூறாவளி காற்று வீச தொடங்கியது. இதில் சாலை மற்றும் தெருக்களில் இருந்த 100க்கும் மேற்பட்ட மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்தன. மின்வயர்கள் அறுந்து விழுந்தன. வீடுகளின் மொட்டை மாடியில் இருந்த தண்ணீர் டேங்குகளும் காற்றில் சாய்ந்தன.

மின்கம்பங்கள் சாய்ந்ததால் நகர் முழுவதும் மின்சாரம் தடைப்பட்டது. சத்தியவாணி முத்து நகர், குருநாதன்கோவில் தெரு பகுதிகளில் ஒரு சில வீடுகள் இடிந்து விழுந்தன. அன்பு நகரில் அரசு பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. விருதுநகர் ரோடு, நாடார் சிவன்கோவில் பகுதி, திருச்சுழி ரோடு பகுதியில் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. மின்னல் தாக்கியதில் அருப்புக்கோட்டை தனியார் மில்லில் தீ விபத்து ஏற்பட்டது.

The post அருப்புக்கோட்டையில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை: 100 மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன appeared first on Dinakaran.

Related Stories: