சென்னை: தமிழகத்தில் உள்ள பொறியியல் பாடங்களில் சேர விரும்பும் மாணவர்களுக்கான ரேண்டம் எண் நாளை வெளியிடப்படவுள்ளது. தரவரிசை பட்டியலில் இரண்டு மாணவர்கள் ஒரே தரவரிசையில் வந்தால் மாணவர் சேர்க்கைக்கு ரேண்டம் எண் எனப்படும் சமவாய்ப்பு எண் பயன்படுத்தப்படுகிறது. விளையாட்டு பிரிவின் கீழ் விண்ணப்பித்த மாணவர்களுக்கு இன்று முதல் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. விளையாட்டு பிரிவினருக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் நேரடியாகவும், விளையாட்டு பிரிவை தவிர பிற பிரிவு மாணவர்களுக்கு இணையவழியாகவும் சான்றிதழ் சரிபார்ப்பு மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக். படிப்புகளில் சேர்க்கைக்கான கலந்தாய்வு கடந்த மாதம் 5ம் தேதி முதல் மாணவர்கள் விண்ணப்பித்து வந்தனர்.
பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்தது. பொறியியல் படிப்புகளில் சேர 2 லட்சத்து 28 ஆயிரத்து 122 மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், 1 லட்சத்து 86 ஆயிரம் மாணவர்கள் மட்டுமே விண்ணப்ப கட்டணம் செலுத்தி இருந்தனர். பொறியியல் படிப்புகளுக்கு கடந்தாண்டை விட 16,810 பேர் இந்தாண்டு கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர். பொறியியல் பாடங்களில் சேர விரும்பும் மாணவர்களுக்கான ரேண்டம் எண் நாளை வெளியிடப்படவுள்ளது. சான்றிதழ்களை ஜூன் 9ம் தேதி வரை பதிவேற்றம் செய்யலாம். தரவரிசை பட்டியல் ஜூன் 26ம் தேதி வெளியிடப்படும். பொது கலந்தாய்வு ஜூலை 7ம் தேதி முதல் ஆகஸ்ட் 24ம் தேதி வரை ஆன்லைன் மூலம் 4 சுற்றுகளாக நடைபெறும் என்பது நினைவுகூரத்தக்கது.
The post தமிழகத்தில் உள்ள பொறியியல் பாடங்களில் சேர விரும்பும் மாணவர்களுக்கான ரேண்டம் எண் நாளை வெளியீடு..!! appeared first on Dinakaran.