இளையான்குடி பகுதியில் 8 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் பருத்தி சாகுபடி

* விலை சரியாக கிடைப்பதில்லை

* பருத்தி ஆலை தொடங்க வேண்டும்

இளையான்குடி : இளையான்குடி அருகே பருத்தி விளைச்சல் பரப்பு அதிகமாக உள்ளது. இதனால் சாலைக்கிராமத்தில் பருத்தி சம்பந்தமான ஆலை தொடங்க வேண்டுமென அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இளையான்குடி வட்டாரத்தில் நெல் விவசாயத்திற்கு அடுத்ததாக பருத்தி சாகுபடி அதிகளவு உற்பத்தி செய்யப்படுகிறது. பெரும்பாலும் மானாவாரி நிலப்பகுதி என்பதால் ஆழ்குழாய் கிணறு மற்றும் மழை காலத்தில் கண்மாய்களில் தேங்கிய நீரை நம்பி பருத்தி நடவு செய்யப்படுகிறது. நெல் அறுவடை முடிந்த பின்பும், மிளகாய் செடியில் ஊடுபயிராகவும் பருத்தி நடவு பணி ஜனவரி, மற்றும் பிப்ரவரி மாதத்தில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இளையான்குடி வட்டாரத்தில் சாலைக்கிராமம், சமுத்திரம், புதுக்கோட்டை, சீவலாதி, சாத்தனூர், முத்தூர், வண்டல், சூராணம், ஆக்கவயல், அளவிடங்கான், விசவனூர், கோட்டையூர், அரியாண்டிபுரம், கரும்பு கூட்டம், ஆகிய பகுதிகள் உட்பட சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 20 ஆயிரம் விவசாயிகள் பருத்தி சாகுபடியிலும், நடவு, அறுவடை, களையெடுப்பு, மற்றும் போக்குவரத்து ஆகிய பணிகளில் சுமார் 50 ஆயிரம் தொழிலாளர்கள் ஆண்டுதோறும் பருத்தி சம்பந்தமான தொழில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆண்டுதோறும் சுமார் 8 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு விளையும் பருத்தி அப்பகுதி பருத்தி விவசாயிகளிடமிருந்து, தனியார் கமிஷன் கடை வியாபாரிகள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அவ்வாறு கொள்முதல் செய்த பருத்தி, திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டத்தில் உள்ள பஞ்சாலைகளுக்கு அனுப்பப்படுகிறது.

சிவகங்கை மாவட்டத்தில் சாலைக்கிராமம் பகுதி பருத்தியே அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதுவரை இல்லாத அளவில் கடந்த 2021ம் ஆண்டு ஒரு கிலோ பஞ்சு விதையுடன் சேர்த்து ரூ.110 வரை கொள்முதல் செய்யப்பட்டது. அதிக பருத்தி வரத்து காரணமாக நடப்பாண்டில் விதையுடன் சேர்ந்த பஞ்சு அதிகபட்சமாக கிலோ ரூ.65 வரை கொள்முதல் செய்யப்பட்டது.
நேற்றைய நிலவரப்படி ரூ.46க்கு கொள்முதல் செய்யப்படுகிறது.

சிலசமயங்களில் விதை இல்லாத பஞ்சின் விலை அதிகமாக இருந்தாலும், விதையுள்ள பஞ்சு விலை ரூ.50 கீழே குறைந்துவிடும். இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. மேலும் வெளி மாவட்டங்களில் உள்ள ஆலைகளுக்கு போக்குவரத்து வசதி மற்றும் தேவையான குடோன் வசதி இல்லாததால் பருத்தி விலையில் சரிவு ஏற்படுகிறது. அதனால் பருத்தி விவசாயிகள் ஆண்டுதோறும் உரிய விலை இல்லாமல் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.

இதனை தவிர்க்க உற்பத்தி செய்த பகுதியில் பருத்தியிலிருந்து பஞ்சு, விதைகளை தனித்தனியாக பிரித்தெடுக்கும், பருத்தி அரவை ஆலை, நூல் ஆலை, பருத்தி விதை ஆலை, பருத்தி எண்ணெய் ஆலை, மற்றும் நூற்பா ஆலை ஆகிய பருத்தி சம்பந்தமான தொழில் நிறுவனங்கள் தொடங்க வேண்டுமென இளையான்குடி வட்டார விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதனால் எண்ணற்ற வேலைவாய்ப்புகள் பெருகும்.

இதுகுறித்து பருத்தி விவசாயி பாஸ்கர் கூறியதாவது, எங்கள் பகுதியில் 5,000 விவசாயிகளுக்கு மேல் பருத்தி சாகுபடி செய்கின்றனர். பஞ்சு விலை உயர்ந்தாலும் எங்களுக்கு பெரிய அளவு லாபம் கிடைப்பதில்லை. பஞ்சு, விதைகளை தனித்தனியாக பிரித்து மதிப்பு கூட்டி விற்கும்போது தான் விவசாயிகளுக்கு லாபம் ஏற்படும். அதனால் சாலைக்கிராமம் பகுதியில் பருத்தி அரவை ஆலை, நூல் ஆலை, தொடங்க தமிழ்நாடு அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

உரிய விலை வேண்டும்

பருத்தி வியாபாரி செல்லக்குமார் கூறியதாவது, இளையான்குடி பகுதி பருத்தி திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள ஆலைகளுக்கு செல்கிறது. மழை மற்றும் போக்குவரத்து குறைபாட்டால் விலை குறைந்து விடும். உற்பத்தி செய்த இடத்தில் ஆலை இருந்தால் பணிகள் சுலபமாகவும், விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கும். தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

The post இளையான்குடி பகுதியில் 8 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் பருத்தி சாகுபடி appeared first on Dinakaran.

Related Stories: