கோடை விடுமுறையின் கடைசி ஞாயிறு என்பதால் மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

மாமல்லபுரம்: கோடை விடுமுறையின் கடைசி ஞாயிற்றுகிழமை என்பதாலும், இன்னும் 2 நாட்களில் பள்ளிகள் திறக்க இருப்பதாலும் நேற்று மாமல்லபுரத்தில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். மாமல்லபுரம் சுற்றுலாத்தலம் உலக அளவில் யுனெஸ்கோ அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்ட உலக புராதன சின்னங்கள் நகரமாக திகழ்வதால் தினமும் ஆயிரக்கணக்கான உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். மேலும், அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு கோடை காலத்தை முன்னிட்டு கிட்டத்தட்ட 45 நாட்களுக்கு மேலாக கோடை விடுமுறை விடப்பட்டது. இதனால், மாமல்லபுரத்திற்கு உள்நாட்டு பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. மேலும், நேற்று கோடை விடுமுறையின் கடைசி ஞாயிற்றுகிழமை என்பதாலும், இன்னும் 2 நாட்களில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் தங்களது குடும்பத்துடன் ரயில், பஸ், வேன், கார் மற்றும் பைக் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் மாமல்லபுரத்தில் குவிந்தனர். மேலும், இவர்கள் வருகையால் வெண்ணெய் உருண்டை பாறை, அர்ஜூணன் தபசு, கிருஷ்ணா மண்டபம், கலங்கரை விளக்கம், கணேசரதம், ஐந்து ரதம், கடற்கரை கோவில், புலிக்குகை, கடற்கரை உள்ளிட்ட இடங்களில் சுற்றுலாப் பயணிகள் கூட்டத்தால் களைகட்டி காணப்பட்டது.

இங்குள்ள, சிற்பங்களை அனைவரும் கண்டு ரசித்து குடும்பம் குடும்பமாக நின்று செல்பி மற்றும் குழுப் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். மேலும், உடல் சூட்டை தணிக்க பலர் கடற்கரையில் குவிந்தனர். அவர்களை, தள்ளுவண்டி வியாபாரிகள் ஆழமான பகுதிகளில் குளிக்க வேண்டாம் என அறிவுறுத்தியும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலர் ஆபத்தை உணராமல் கடலில் குளித்ததையும், காண முடிந்தது. மேலும், கடற்கரையில் பாறைகள் உள்ள ஆபத்தான பகுதிகளில் குளிக்க வேண்டாம் என பயணிகளிடம் சட்டம் ஒழுங்கு போலீசார் தொடர்ந்து எச்சரித்துக் கொண்டே இருந்தனர். சுற்றுலாப் பயணிகள் கொண்டு வந்த வாகனங்களை நிறுத்த இடம் இல்லாததால் ஆங்காங்கே சாலையை மறித்து நிறுத்தினர். இதனால், கோவளம் சாலை, கிழக்கு ராஜவீதி, ஒத்த வாடை தெரு, மேற்கு ராஜவீதி, தென் மாட வீதி, கடற்கரை கோயிலுக்கு செல்லும் சாலை, ஐந்து ரதம் உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்கள் வெளியே செல்ல முடியாமல் சற்று நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக, தென் மாட வீதியில் வாகனங்கள் கண்மூடி தனமாக நிறுத்தப்பட்டதால், மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் வீட்டிலேயே முடங்கினர். இதையடுத்து, மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன், டிராபிக் இன்ஸ்பெக்டர் மகேஷ் ஆகியோர் தலைமையில், சட்டம் ஒழுங்கு மற்றும் டிராபிக் போலீசார் விரைந்து வந்து போக்குவரத்தை சீர் செய்தனர்.

The post கோடை விடுமுறையின் கடைசி ஞாயிறு என்பதால் மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் appeared first on Dinakaran.

Related Stories: