பாலியலுக்கு எதிராக 5ம்தேதி டெல்லியில் ஆர்ப்பாட்டம்: விவசாய சங்க தலைவர்கள் தகவல்

காஞ்சிபுரம்: அகில இந்திய விவசாயிகள் சங்க செயற்குழு கூட்டம் காஞ்சிபுரத்தில் 2 நாள் நடைபெற்றது. அகில இந்திய தலைவர் அசோக் தாவ்லே தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் விஜி கிருஷ்ணன், நிதி செயலாளர் கிருஷ்ண பிரசாத், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில தலைவர் பெ.சண்முகம், அகில இந்திய துணை செயலாளர் டி.ரவீந்திரன், மாநில பொதுச்செயலாளர் சாமிநடராஜன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், மணிப்பூர் கலவரத்திற்கு ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகதான் காரணம். கடந்த 9 ஆண்டுகளில் 4 லட்சம் விவசாயிகள் மற்றும் விவசாயம் சார்ந்த தொழிலாளர்கள் தற்கொலை செய்துள்ளனர். இதற்கு முக்கிய காரணம் பாஜக. ரப்பர் உற்பத்தி தொழிலாளிகளுக்கு உரிய விலை கிடைப்பதில்லை. உரிய விலை தரவலியுறுத்தி நாடாளுமன்றம் நோக்கி செப் 15ம்தேதி போராட்டம் நடத்துவது, ஆகஸ்ட் 14ம் தேதி கார்ப்பரேட் நிறுவனங்கள் வெளியேற போராட்டத்தில் ஈடுபடுவது, மின்சார சட்டதிருத்த மசோதாவை திரும்ப பெறவேண்டும். கரும்புக்கு உரிய விலை தரவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதையடுத்து அகில இந்திய பொதுச்செயலாளர் விஜி கிருஷ்ணன் மற்றும் மாநில தலைவர் சண்முகம் ஆகியோர் கூட்டாக நிருபர்களிடம் கூறியதாவது: மேகதாது பிரச்னையில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி தமிழ்நாடு அனுமதி இல்லாமல் எந்தவித கட்டுமானங்களிலும் ஈடுபட கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மீறி செயல்படுவோம் என கூறுவது ஏற்கத்தக்கதல்ல. மல்யுத்த வீரர்கள் பாலியலுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதுகுறித்து பாஜ நடவடிக்கை எடுக்கவில்லை. இதை கண்டித்து வரும் 5ம்தேதி டெல்லியில் மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் சங்கம் ஈடுபடும். மணிப்பூரில் ஒரு மாதமாக கலவரம் நடைபெற்று வருகிறது. இதற்கு ஒன்றிய அரசு பொறுப்பு ஏற்கவேண்டும். நெய்வேலி 2வது சுரங்கம் விரிவாக்கம் தொடர்பாக ஒருசில விவசாயிகள் நிலம் கொடுக்க தயாராக உள்ளனர். அவர்களுக்கு இழப்பீடு முறையாக கொடுக்கவேண்டும். 3வது சுரங்கம் அமைத்தால் பெரிய பாதிப்பு ஏற்படும் என்பதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். இவ்வாறு கூறியுள்ளனர்.

கூட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் கே.நேரு, மாவட்ட தலைவர் சாரங்கன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சி.சங்கர் மற்றும் நிர்வாகிகள் சுகுமார், செல்வம், முருகன் மற்றும் இந்தியா முழுவதும் இருந்து 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

The post பாலியலுக்கு எதிராக 5ம்தேதி டெல்லியில் ஆர்ப்பாட்டம்: விவசாய சங்க தலைவர்கள் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: