மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவு திருச்சி தலைமை தபால் நிலையத்தை விவசாயிகள், மாணவர்கள் முற்றுகை: 100 பேர் கைது

திருச்சி: இந்திய மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக குற்றச்சாட்டுக்குள்ளான பாஜக எம்பி பிரிஜ்பூசண் சரண்சிங்கை கைது செய்ய வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்ப திருச்சி தலைமை தபால் நிலையம் முன் இன்று காலை தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாகண்ணு தலைமையில் 100 மேற்பட்ட ஆண், பெண் விவசாயிகள் கூடினர். அவர்களை போலீசார் தடுத்ததால், தபால் நிலையம் முன் சாலையில் அமர்ந்து ஒன்றிய அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர். பாஜ எம்பியை கைது செய்ய வேண்டும், விவசாயிகளை பாதுகாக்க விளைபொருளுக்கு கட்டுப்படியான விலை கொடுக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினர்.

அப்போது அவர்களை கலைந்து போக சொன்னதால் போலீசாருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து இரும்பு தடுப்புகளை தாண்டி தபால் நிலையத்துக்குள் செல்ல முயன்ற அய்யாக்கண்ணு, 30 பெண்கள் உள்பட 75 பேரை போலீசார் கைது செய்தனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட 30 பேரை போலீசார் கைது செய்தனர்.

The post மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவு திருச்சி தலைமை தபால் நிலையத்தை விவசாயிகள், மாணவர்கள் முற்றுகை: 100 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: