நத்தம் செந்துறையில் வியாபாரிகளை பணம் கேட்டு மிரட்டிய போலி போலீஸ் கைது

 

நத்தம், ஜூன் 2: நத்தம் அருகே செந்துறையில் கடைகளில் புகையிலை பொருட்கள் உள்ளதா என சோதனையிட்டு வியாபாரிகளிடம் பணம் கேட்டு மிரட்டிய போலி போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார். நத்தம் அருகே செந்துறை பகுதியில் உள்ள கடைகளில் மதுவிலக்கு பிரிவு போலீசார் என தெரிவித்து ஒருவர் நேற்று முன்தினம் திடீர் சோதனையில் ஈடுபட்டார். அப்போது அவர், ‘தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பதாக எங்களுக்கு புகார் வந்துள்ளது, அதனால் சோதனை செய்ய வேண்டும்’’ என கடைக்காரர்களிடம் தெரிவித்துள்ளார். ஆனால், கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் எதுவும் பிடிபடவில்லை.

எனினும் அவர், வியாபாரிகளை மிரட்டி பணம் கேட்டுள்ளார். இதனால் அவர் மீது சந்தேகமடைந்த வியாபாரிகள், அவரது அடையாள அட்டையை வாங்கி பார்த்துள்ளனர். அப்போதுதான் அது போலியான அடையாள அட்டை என்பது வியாபாரிகளுக்கு தெரியவந்தது. இதுகுறித்து வியாபாரிகள், உடனே நத்தம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். எஸ்ஐ பூபதி மற்றும் போலீசார், அந்த நபரை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதில் வியாபாரிகளை மிரட்டியவர் மதுரை மாவட்டம், மேலூர் தாலுகா, மேலவளவை சேர்ந்த தினகரன் (36) என்பதும், அவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழிப்பறி, மோசடி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர். வழக்குப்பதிந்த போலீசார், அவரை கைது செய்தனர்.

The post நத்தம் செந்துறையில் வியாபாரிகளை பணம் கேட்டு மிரட்டிய போலி போலீஸ் கைது appeared first on Dinakaran.

Related Stories: