பட்டாசு ஆலையில் தீ: 3 பேர் கருகி பலி

சேலம்: சேலம் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 3 பேர் உடல்சிதறி பலியாகினர். 6 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.சேலம் இரும்பாலை பக்கமுள்ள சர்க்கார் கொல்லப்பட்டியை சேர்ந்தவர் சதிஷ்குமார் (41). இவர் அங்குள்ள நாச்சியார் கோயில் பின்பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் நாட்டு வெடி பட்டாசுகள் தயாரிக்கும் ஆலை வைத்துள்ளார். இங்கு அப்பகுதியை சேர்ந்தவர்கள் வேலை செய்து வருகின்றனர். நேற்று உரிமையாளர் சதிஷ்குமார் உள்பட 9 பேர் பட்டாசு தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மாலை 4 மணியளவில் திடீரென பட்டாசு ஆலை பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

இதுகுறித்து 108 ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இரும்பாலை போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். படுகாயத்துடன் ஆங்காங்கே கிடந்த 6 பேரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உரிமையாளர் சதிஷ்குமார் (41), நடேசன்(50), பானுமதி (40) என 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி இறந்து கிடந்தனர். அடையாளம் தெரியாத பெண்ணின் சடலத்தில் தலையை காணவில்லை. மூவரின் சடலங்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மஜ்ரா கொல்லப்பட்டியை சேர்ந்த மோகனா(38), வசந்தா(45), மகேஷ்வரி(34) எஸ்.கொல்லப்பட்டியை சேர்ந்த மணிமேகலை (36), பிரபாகரன்(30), பிருந்தா(28) ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களுக்கு தீக்காயம் அதிகளவில் இருக்கிறது. அனைவருக்கும் 40 சதவீதத்தில் இருந்து 60 சதவீதம் வரை காயங்கள் உள்ளது. சம்பவ இடத்திற்கு மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி, துணை கமிஷனர்கள் கவுதம்கோயல், லாவண்யா, உதவி கலெக்டர் மாறன் ஆகியோர் ேநரில் சென்று பார்வையிட்டனர்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு லா ₹3 லட்சம் : முதல்வர் உத்தரவு
முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை:சேலம் மாவட்டம், எஸ்.கொல்லப்பட்டி கிராமத்தில் இயங்கி வந்த தனியாருக்கு சொந்தமான பட்டாசு கிடங்கில் இன்று (நேற்று) எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் சேலம் எம்.கொல்லப்பட்டியை சேர்ந்த நடேசன், சதீஷ்குமார் மற்றும் அடையாளம் தெரியாத ஒரு பெண் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

மேலும், இவ்விபத்தில் காயமடைந்து சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வசந்தா, மோகனா, மணிமேகலா, மகேஸ்வரி, பிரபாகரன், பிருந்தா ஆகிய 6 பேருக்கும் சிறப்பு சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளேன். உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சமும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் 6 பேருக்கு தலா ரூ.50 ஆயிரமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post பட்டாசு ஆலையில் தீ: 3 பேர் கருகி பலி appeared first on Dinakaran.

Related Stories: