வத்திராயிருப்பு அருகே மாந்தோப்பில் ஒற்றை யானை அட்டகாசம்: மரங்களை வேரோடு சாய்த்தது

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு பகுதியை சுற்றி மேற்கு தொடர்ச்சி மலை உள்ளது. கான்சாபுரம் அத்தி கோயில், பிளவக்கல் அணை அடிவாரப் பகுதி, தாணிப்பாறை அடிவாரப்பகுதி, மந்தி தோப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் தென்னை, மா, பலா, வாழை, தேக்கு உள்ளிட்ட தோப்புகள் உள்ளன. இதில் பிளவக்கல் அணை பகுதியில் உள்ள வண்ணாம்பாறை அருகில் கூமாபட்டியை சேர்ந்த அப்துல் மஜீத் என்பவருக்கு சொந்தமான மாந்தோட்டம் உள்ளது. கடந்த நான்கு நாட்களாக ஒற்றை யானையை ஒன்று இரவு நேரங்களில் இவரது தோட்டத்திற்குள் புகுந்து மாமரங்களை சூறையாடி வருகிறது. இதுவரை பத்துக்கும் மேற்பட்ட மாமரங்களை வேரோடு சாய்த்து சேதப்படுத்தியுள்ளது. தென்னங்கன்றுகள், தேக்கு மரங்கள் ஆகியவற்றை சேதப்படுத்தி உள்ளது.

தொடர்ந்து யானை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் கலக்கமடைந்துள்ளனர். இதேபோன்று திருவில்லிபுத்தூரை சேர்ந்த பாலு என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் மாமரத்தை சேதப்படுத்தி உள்ளது. எனவே வனத்துறை மற்றும் வருவாய் துறையினர் ஆய்வு செய்து விவசாயிக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். மேற்கு தொடர்ச்சி மலைக்கு யானையை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பகுதிகளில் சோலார் மின் வேலி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு தேவையான டார்ச் லைட், பட்டாசு போன்ற பொருட்களை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post வத்திராயிருப்பு அருகே மாந்தோப்பில் ஒற்றை யானை அட்டகாசம்: மரங்களை வேரோடு சாய்த்தது appeared first on Dinakaran.

Related Stories: