போக்குவரத்து துறையில் ஏஜென்சி மூலம் ஊழியர்கள் பணியமர்த்தும் திட்டம் நிறுத்தம்: போக்குவரத்து அதிகாரிகள் உறுதி; பேச்சுவார்த்தையில் முடிவு; அனைத்து தொழிற்சங்கங்களுடன் 9ம் தேதி மீண்டும் பேச்சு

சென்னை: போக்குவரத்து துறையில் வெளிமுகமை மூலம் ஊழியர்கள் எடுக்கும் திட்டத்தை நிறுத்தி வைப்பதாக தொழிற்சங்க நிர்வாகிகளுடனான பேச்சுவார்த்தையில் அதிகாரிகள் உறுதி அளித்தனர். அனைத்து தொழிற்சங்கங்களுடன் ஜூன் 9ம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும். சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் தொழிலாளர் நல சிறப்பு இணை ஆணையர் வேல்முருகன் தலைமையில் முத்தரப்பு சமரச பேச்சுவார்த்தை நடைப்பெற்றது. பேச்சுவார்த்தையில் சிஐடியூ தொழிற்சங்க பிரதிநிதிகள், போக்குவரத்து துறை அதிகாரிகள், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

பேச்சுவார்த்தைக்கு பின் நிருபர்களிடம் பேசிய சிஐடியூ மாநில தலைவர் சவுந்தரராஜன் கூறியதாவது: நாங்கள் வேலை நிறுத்தத்திற்கு கொடுத்திருந்த கோரிக்கை காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். தமிழ்நாடு முழுவதும் ஓட்டுநர், நடத்துனர், பராமரிப்பாளர் என 15,000 பணியிடங்கள் காலியாக உள்ளது. போக்குவரத்து தொழிலாளர்களை சார்ந்திருக்கும் துறை, அனைத்து பிரிவுகளிலும் போதுமான பணியாளர்கள் இருக்க வேண்டும். 10 ஆண்டுகளாக காலிப்பணியிடங்கள் நிரப்பக்கோரி நாங்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். குறிப்பாக பரமரிப்பரிப்பு பிரிவில் தொழிலாளர் போதுமான அளவில் இல்லாததால் சென்னையில் 900 பேருந்துகள் நிறுத்தப்படுகிறது. இதனால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். ஒர்க் ஷாப் ஓட்டுநர்கள் பணிக்கு நிரந்தர பணியாளர்கள் தேவையில்லை ஒப்பந்த பணியாளர்கள் போதும் என முடிவெடுத்து ஒப்பந்தப்புள்ளி கோரினார்கள்.

இதனால் தற்போது பணியில் உள்ள 500 பேருக்கு வேலை இல்லாமல் போகும். இதற்கு அனுமதித்தால் தொடர்ந்து அனைத்து பணிகளுக்கு இந்த முறை செயல்படுத்தப்படும். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு சில பணிமனைகளில் சிலர் தாங்கள் ஒப்பந்த அடிப்படையில் வந்திருக்கிறோம் என்பதை கேட்ட பணியாளார்கள் கோபமடைந்தனர். போக்குவரத்துத் துறை தனியார் மயமாகாது என அமைச்சர் தெரிவித்திருந்தார். இன்று(நேற்று) நடைப்பெற்ற பேச்சுவார்த்தையில் தொழிலாளர் நலத்துறையின் அறிவுரைக்கிணங்க, வெளிமுகமை மூலம் காலி பணியிடங்களை நிரப்பும் திட்டத்தை நிறுத்தி வைப்பதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் உறுதி அளித்தனர். அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை வரும் ஜூன் 9ம் தேதி அனைத்து போக்குவரத்து தொழிற்சங்க பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

The post போக்குவரத்து துறையில் ஏஜென்சி மூலம் ஊழியர்கள் பணியமர்த்தும் திட்டம் நிறுத்தம்: போக்குவரத்து அதிகாரிகள் உறுதி; பேச்சுவார்த்தையில் முடிவு; அனைத்து தொழிற்சங்கங்களுடன் 9ம் தேதி மீண்டும் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: