மக்களைத் தேடி மேயர் திட்டத்தின் கீழ் பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் மனுக்களை நேரடியாகப் பெற்றார் மேயர் பிரியா

சென்னை: மக்களைத் தேடி மேயர் என்ற திட்டத்தின் கீழ் பெருநகர சென்னை மாநகராட்சி திரு.வி.க.நகர் மண்டல அலுவலகத்தில் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு முன்னிலையில், மேயர் ஆர்.பிரியா பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் மனுக்களை நேரடியாகப் பெற்று உரிய நடவடிக்கை மேற்கொண்டார்.

பெருநகர சென்னை மாநகராட்சி மாண்புமிகு மேயர் 2023-24ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையில் பொதுமக்களின் குறைகளை கண்டறிந்து, அவற்றின் மீது உடனடி தீர்வு காணும் வகையில், “மக்களைத் தேடி மேயர்” என்ற திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவித்தார்கள். மேயர் பிரியா அறிவிப்பின்படி மக்களைத் தேடி மேயர் என்ற சிறப்பு முகாமானது 03.05.2023 அன்று தொடங்கி வைக்கப்பட்டு, மண்டலம் 5-க்குட்பட்ட பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, திரு.வி.க.நகர் மண்டல அலுவலகத்தில் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு முன்னிலையில், மேயர் பிரியா இன்று (31.05.2023) மண்டலம் 6-க்குட்பட்ட பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை நேரடியாகப் பெற்று உரிய நடவடிக்கை மேற்கொண்டார்கள். இந்தச் சிறப்பு முகாமில் பொதுமக்களிடமிருந்து சாலை வசதி, பள்ளிக் கூடத்தில் கட்டிட வசதி, சமுதாயக் கூடம் மேம்பாடு, மழைநீர் வடிகால் வசதி, குடியிருப்பு வசதி, பிறப்பு, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 239 கோரிக்கை மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன.

இதில் பிறப்பு சான்றிதழ் தொடர்பான 4 மனுக்கள், சொத்து வரி பெயர் மாற்றம் தொடர்பான 2 மனுக்கள் என 6 மனுக்கள் மீது மேயர் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு பயனாளிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார். இதர கோரிக்கை மனுக்கள் தொடர்புடைய துறைகள் வாயிலாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்படும். இந்நிகழ்வினையொட்டி, சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சை வழங்கப்பட்டது.

முன்னதாக, இந்த சிறப்பு முகாமில் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் மேயர் பிரியா 20 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து உணவுப் பெட்டகங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளும், 2 பயனாளிகளுக்கு ஆதரவற்ற விதவைச் சான்றிதழ்கள், 5 பயனாளிகளுக்கு முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ்கள், 1 பயனாளிக்கு வருமானச் சான்றிதழ், 1 பயனாளிக்கு சாதி சான்றிதழ் ஆகியவை வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் திரு.வி.க.நகர் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி , துணை மேயர் மு.மகேஷ்குமார், கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ.இராதாகிருஷ்ணன், கூடுதல் ஆணையாளர் (சுகாதாரம்) சங்கர்லால் குமாவத், இணை ஆணையாளர் (பணிகள்) டாக்டர் ஜி.எஸ்.சமீரன் மத்திய வட்டார துணை ஆணையாளர் எஸ்.ஷேக் அப்துல் ரஹ்மான், மாமன்ற ஆளுங்கட்சித் தலைவர் ந.இராமலிங்கம், மாமன்ற ஆளுங்கட்சி கொறடா எ. நாகராஜன், நியமனக் குழு உறுப்பினர் சொ.வேலு, மண்டலக்குழுத் தலைவர் சரிதா மகேஷ்குமார், மாமன்ற உறுப்பினர்கள், மண்டல அலுவலர் ஏ.எஸ்.முருகன் மற்றும் மாநகராட்சி உள்ளிட்ட தொடர்புடைய துறைகளின் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post மக்களைத் தேடி மேயர் திட்டத்தின் கீழ் பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் மனுக்களை நேரடியாகப் பெற்றார் மேயர் பிரியா appeared first on Dinakaran.

Related Stories: