களக்காடு அருகே ஊருக்குள் புகுந்த கரடி கூண்டில் சிக்கியது

களக்காடு: களக்காடு அருகே ஊருக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வந்த கரடி கூண்டில் சிக்கியது. நெல்லை மாவட்டம், களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் புலிகள் காப்பகம் அமைக்கப்பட்டு வனவிலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இங்கு வாழும் வன விலங்குகள் அடிக்கடி மலையடிவார கிராமங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்வது வழக்கம். இதுபோல வனப்பகுதியில் இருந்து வெளிவந்த கரடி ஒன்று களக்காடு அருகே பெருமாள்குளம் கிராமத்திற்குள் சுற்றி திரிந்தது. மேலும் அங்குள்ள கோயிலுக்குள் புகுந்த கரடி, எண்ெணய் குடித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து அச்சமடைந்த பெருமாள்குளம் கிராம மக்கள் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இதனை வலியுறுத்தி பெருமாள்குளம் மக்கள் மறுமலர்ச்சி சங்க தலைவர் எபநேசர் களக்காடு வனத்துறையினரிடம் மனு அளித்தார். வனத்துறையினர் பெருமாள்குளத்திற்கு சென்று ஆய்வு நடத்தி கரடியை பிடிப்பதற்காக அங்குள்ள இசக்கியம்மன் கோயில் முன்பு கூண்டு வைத்தனர். ஆனால் கரடி சிக்கவில்லை. இதற்கிடையே பெருமாள்குளத்தில் உள்ள யூனியன் துணை தலைவர் விசுவாசம் தோட்டத்தில் கரடியின் நடமாட்டம் காணப்பட்டது. இதனால் இசக்கியம்மன் கோயில் அருகே வைக்கப்பட்டிருந்த கூண்டு விசுவாசம் தோட்டத்திற்கு மாற்றப்பட்டது. கூண்டுக்குள் பழ வகைகள் வைத்து வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவில் கூண்டுக்குள் கரடி சிக்கியது.

கரடியை காண பொதுமக்கள் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கூண்டுக்குள் சிக்கிய கரடி 6 வயதுடைய பெண் கரடி ஆகும். கரடிக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின்னர் கரடியை வனசரகர் பிரபாகரன் மற்றும் வனத்துறையினர் பாதுகாப்புடன் களக்காடு செங்கல்தேரி வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘இதுபோல மேலும் இரு கரடிகள் சுற்றி திரிவதால் அவைகளையும் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்’ என்றனர்.

The post களக்காடு அருகே ஊருக்குள் புகுந்த கரடி கூண்டில் சிக்கியது appeared first on Dinakaran.

Related Stories: