பாரதி அரசு மகளிர் கல்லூரியில் மதிப்பெண் சான்றிதழ்கள் மாயம்

 

சோழிங்கநல்லூர்: பாரதி அரசு மகளிர் கல்லூரியில் மாணவிகளின் மதிப்பெண் சான்றிதழ்கள் மாயமானதாக, கல்லூரி பேராசிரியை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பிராட்வே பிரகாசம் சாலையில் பாரதி அரசு மகளிர் கல்லூரி உள்ளது. வட சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கின்றனர். இந்த கல்லூரியில் பழுதடைந்த கட்டிடங்களை இடித்துவிட்டு, தற்போது புதிய கட்டிடங்கள் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த கல்லூரியில் படிக்கும் 58 மாணவிகளின் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்களை காணவில்லை என்று பேராசிரியர் ஹேமா, முத்தியால்பேட்டை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தார்.

அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது புதிய கட்டிடம் கட்டப்படுவதால், சான்றிதழ்களை அலுவலகத்தில் உள்ள ஒரு அறையின் பீரோவில் வைத்திருந்தனர். அந்த பீரோ உடைக்கப்படாமல் சான்றிதழ்கள் மாயமாகியுள்ளன. எனவே, சான்றிதழ்கள் திருடு போனதா அல்லது இடம் மாற்றம் செய்தபோது காணாமல் போனதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதிப்பெண் சான்றிதழ்கள் மாயமான தகவல் மாணவிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The post பாரதி அரசு மகளிர் கல்லூரியில் மதிப்பெண் சான்றிதழ்கள் மாயம் appeared first on Dinakaran.

Related Stories: