சென்னை: நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் புதன்கிழமை கடைசி நாள் ஆகும். நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் உதவி பேராசிரியராகப் பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கு மத்திய அரசின் உதவித் தொகை பெறவும் நெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தேசிய தேர்வு முகமை (என்டிஏ) நடத்தும் இந்தத் தேர்வு ஆண்டுதோறும் ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் என 2 முறை நடத்தப்படுகிறது. அந்த வகையில் நடப்பாண்டுக்கான முதல் பகுதி தேர்வு தொடர்பான அறிவிப்பை தேசிய தேர்வு முகமை வெளியிட்டிருந்தது. தேர்வை எழுத விருப்பமுள்ளவர்களுக்கான விண்ணப்ப பதிவு கடந்த 10ம் தேதி தொடங்கியது. இந்தத் தேர்வுக்கு ஆர்வமுடன் பலர் விண்ணப்பித்து வருகின்றனர்.
இந்த நிலையில் விண்ணப்பிப்பதற்கு நாளை மறுதினம் (புதன்கிழமை) கடைசி நாள் ஆகும். தேர்வுக்கான விண்ணப்ப கட்டணத்தை வருகிற 1ம் தேதி இரவு 11.50 மணிக்குள் செலுத்த வேண்டும். விண்ணப்பங்களில் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் மேற்கொள்வதற்கு வருகிற இரண்டு மற்றும் மூன்றாம் தேதிகளில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்தவர்களுக்கான தேர்வு மையங்கள் குறித்த அறிவிப்பு அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என்றும், ஹால் டிக்கெட்டை தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் 2வது வாரத்தில் பதிவிறக்கம் செய்து கொள்வதற்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் தேசிய தேர்வு முகமை ஏற்கனவே தெரிவித்துள்ளது. தேர்வை பொறுத்தவரையில் அடுத்த மாதம் 13ம் தேதி முதல் 22ம் தேதி வரை நாடு முழுவதும் கணினி வாயிலாக நடத்தப்பட இருக்கிறது. இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு //ugcnet.nta.nic.in, www.nta.ac.in என்ற இணையதள முகவரிகளில் சென்று தெரிந்து கொள்ளலாம்.
The post நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் புதன்கிழமை கடைசி நாள் appeared first on Dinakaran.