வேதை விவசாயிகள் வேதனை புள்ளி நோய் தாக்குதலால் 1,000 டன் மாங்காய் தேக்கம்: 10 கோடி இழப்பு

வேதாரண்யம்: நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே செம்போடை, தேத்தாகுடி, புஷ்பவனம், பெரியகுத்தகை, வெள்ளப்பள்ளம், நாலுவேதபதி, உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் 5,000 ஏக்கரில் மா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் செந்தூரா, பங்கனப்பள்ளி, ருமேனியா, ஒட்டு, நீலம் என 10க்கும் மேற்பட்ட வகையான மாங்காய்கள் விளைவிக்கப்படுகிறது. ஆண்டு தோறும் இப்பகுதியில் சுமார் 5,000 டன் மாம்பழங்கள் விளைவிக்கப்பட்டு தமிழகம் மற்றும் கேரளா, ஆந்திரா, மும்பை உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

தற்போது அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் மாங்காயில் கருப்பு புள்ளி நோய் தாக்கியுள்ளது. இந்த புதிய வகை நோய் அதிகளவில் உள்ளதால் வியாபாரிகள் மாங்காயை கொள்முதல் செய்ய முன்வரவில்லை. கருப்புப் புள்ளி இல்லாத மாங்காய்கள் ரூ.10க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் வேதாரண்யம் பகுதியில் 1,000 டன் மாங்காய் அறுவடை செய்யப்படாமல் மரத்திலேயே முற்றி வீணாகி வருகிறது. இதனால் சுமார் ரூ.10 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். இந்நிலையில், தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் இப்பகுதியில் நேரில் ஆய்வு செய்தனர். பின்னர் அவர்கள் கூறுகையில், ‘இந்த புதிய நோய்க்கு என்ன தீர்வு என்று,வேளாண்மை அறிவியல் நிலையத்தில் இருந்து வேளாண் விஞ்ஞானிகளை வரவழைத்து ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளுக்கு உரிய ஆலோசனை வழங்கப்படும்’ என்று தெரிவித்தனர்.

The post வேதை விவசாயிகள் வேதனை புள்ளி நோய் தாக்குதலால் 1,000 டன் மாங்காய் தேக்கம்: 10 கோடி இழப்பு appeared first on Dinakaran.

Related Stories: