திருப்பரங்குன்றம், அழகர்கோவில் மலையில் இழுவை ரயில், ரோப்கார் வசதி உருவாக்கப்படுமா?: சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் காத்திருப்பு

மதுரை: திருப்பரங்குன்றம் மலையில் இழுவை ரயில், அழகர்மலையில் ரோப்கார் திட்டம் ஆகியவை அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டு ஆய்வு பணிகள் நடந்து வரும் நிலையில், அவற்றை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். நாட்டின் பழமைவாய்ந்த நகரங்களில் மதுரை முக்கியமானது. இந்நகரத்தில் உள்ள புராதன சின்னங்களை காண்பதற்கு, தினமும் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். சமீபகாலமாக ஆன்மீக சுற்றுலா அதிகரித்து வருகிறது. இந்த அடிப்படையில் மீனாட்சியம்மன் கோயிலுக்கு பிறகு, முருகனின் அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம், ஆறாம்படை வீடான அழகர்கோவில் மலையில் அமைந்துள்ள சோலைமலை கோயிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக வெளிநாடு வாழ் தமிழர்கள் இக்கோயில்களுக்கு வருவதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.பெரும்பாலான சுற்றுலா பயணிகள் திருபரங்குன்றம் மலையின் பின் பகுதி வழியாக உச்சி வரை சென்று, அங்குள்ள காசிவிஸ்வநாதர் கோயிலில் தரிசனம் செய்கின்றனர். அங்கிருந்து மதுரை நகரின் எழில்மிகு தோற்றத்தை கண்டு ரசிக்கின்றனர்.

அழகர்மலையிலுள்ள நூபுரகங்கை, நாகதேவதை கோயில் உள்ளிட்ட அபூர்வங்களை கண்டு ரசிக்கவும் ஆர்்வமுடன் வருகின்றனர். மதுரை வரும் சுற்றுலா பயணிகளை மேலும் கவரும் வகையில் புதிய திட்டங்களை உருவாக்க சுற்றுலாத்துறைக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.இதனைத்தொடர்ந்து, பல்வேறு திட்டங்களை ஒன்றிய, மாநில அரசுக்கு சுற்றுலாத்துறை பரிந்துரைத்தது. இதில் முக்கியமாக திருப்பரங்குன்றம் மலை மலை உச்சிக்கு பழநியை போலவே இழுவை ரயில் அமைக்கும் திட்டம் உருவாக்கப்பட்டது. இதில் பயணம் செய்து உச்சியை அடைந்தால் மதுரை மீனாட்சியம்மன் கோயிலை கோபுரங்களுடன் காணலாம். மேலும், பசுமலை, நாகமலை, யானைமலை மற்றும் மதுரை மாநகரின் முழு தோற்றத்தையும் கண்டு ரசிக்கலாம். அதேபோல், அழகர்மலை உச்சிக்கு செல்ல பழநியை போல ரோப்கார் அமைக்கும் திட்டம் உருவாக்கப்பட்டது. இதில் பயணிப்போர் மலையின் பசுமை அழகை முழுமையாக ரசிக்க முடியும். இது குடும்பத்துடன் சுற்றுலா வருவோரையும், பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளையும் பெரிதும் கவரும்.

இதன்மூலம் கோயில் நிர்வாகத்திற்கும், சுற்றுலாத்துறைக்கு வருவாய் அதிகரிக்கும். இத்திட்டங்கள் தொடர்பாக அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டு, சுற்றுலாத்துறை, அறநிலையத்துறை மற்றும் தொடர்புடைய துறையினர் ஆய்வு பணிகளை மேற்கொண்டனர். இதில் அடுத்தகட்ட பணிகள் எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்புடன் சுற்றுலா பயணிகள் காத்திருக்கின்றனர். இதற்கிடையே, அழகர்மலை சுற்றுலா மேம்பாட்டு திட்டம் ரூ.100 கோடியில் நிறைவேற்றப்படும் என தமிழ்நாடு அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.இது குறித்து சமூக ஆர்வலரான வழக்கறிஞர் கனகவேல் பாண்டியன் கூறும்போது, ‘‘மதுரை தொன்மையான நகரம் என்பதால், இங்கு சுற்றுலாவிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பின்புறத்தில் இருந்து மலைக்கு செல்ல இழுவை ரயில் திட்டம் தயாரிக்கப்பட்டது. அதற்கான ஆய்வு முடிந்துள்ளதாகவும், அதேபோல், அழகர்மலையில் ரோப்கார் அமைப்பது தொடர்பாக ஆய்வு மட்டும் நடந்துள்ளதாகவும் தெரிகிறது. சமீபத்தில் சித்திரைத்திருவிழா தொடர்பாக மதுரையில் ஆய்வு செய்த இந்து அறநிலைத்துறை அமைச்சர் திருப்பரங்குன்றம் இழுவை ரயில் ஆய்வு பணி முடிந்துள்ளதாக கூறியுள்ளார்.

இது வரவேற்கதக்கது. இத்திட்டங்களை நிறைவேற்றினால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகாரிக்கும். இதன்மூலம், மதுரை வளர்ச்சி பெறவும் வாய்ப்புண்டு. இழுவை ரயில், ரோப்கார் திட்டங்களை எதிர்பார்த்து மதுரை மக்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்’’ என்றார்.சுற்றுலாத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, மதுரை நோக்கி சுற்றுலா பயணிகளை மேலும் ஈர்க்கும் நோக்குடன் புதுமைகளை புகுத்தும் திட்டம் தயாரித்து ஒன்றிய, மாநில அரசுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் முக்கியமாக இழுவை ரயில், ரோப்கார் திட்டங்கள் உள்ளன.
ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டமும் மத்திய சுற்றுலாத்துறைக்கு பரிந்துரைக்கப்பட்டு ஏற்கப்பட்டுள்ளது. அதன்படி மதுரையில் இருந்து கொடைக்கானலுக்கு ெஹலிகாப்டர் சுற்றுலா திட்டம் தயாரானது. அது செயல்பாட்டிற்கு வருவது குறித்து அரசின் முடிவு எதிர்பார்ககப்படுகிறது என்றார்.

The post திருப்பரங்குன்றம், அழகர்கோவில் மலையில் இழுவை ரயில், ரோப்கார் வசதி உருவாக்கப்படுமா?: சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் காத்திருப்பு appeared first on Dinakaran.

Related Stories: