100 ஆண்டுகள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட சீர்காழி அரியாப்பிள்ளை குளம் சீரமைப்பு பணி

சீர்காழி, மே 27: ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட சீர்காழி அரியாப்பிள்ளை குளம் சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்குட்பட்ட தாடாளன் கோயில் பகுதியில் அமைந்துள்ள அரியாப்பிள்ளை குளம் கடந்த நூறு ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமிப்பில் இருந்து வந்த நிலையில் மாவட்ட கலெக்டர் மகாபாரதி உத்தரவின் பேரில் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. தற்போது இந்த குளம் கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ 1.11 கோடி செலவில் தூர்வாரி சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.

இந்த பணியை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் இயக்குனர் அமுதவல்லி பார்வையிட்டு நேரில் ஆய்வு மேற்கொண்டார். இதேபோல் சீர்காழி நகராட்சிக்குட்பட்ட ஈசானிய தெரு பகுதியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.56 லட்சம் செலவில் நடைபெற்று வரும் காமராஜர் பூங்கா பணியை பார்வையிட்டார். அப்போது மாவட்ட கலெக்டர் மகாபாரதி, ஊரக வளர்ச்சித்துறை இணை இயக்குனர் லேகா தமிழ்செல்வன், சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அர்ச்சனா, ஊரக வளர்ச்சி துறை செயற்பொறியாளர் செந்தில்குமார், உதவி இயக்குனர் ( ஊராட்சிகள் ) மஞ்சுளா, சீர்காழி வட்டாட்சியர் செந்தில்குமார், சீர்காழி நகராட்சி பொறியாளர் சித்ரா, பணி மேற்பார்வையாளர் விஜேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

The post 100 ஆண்டுகள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட சீர்காழி அரியாப்பிள்ளை குளம் சீரமைப்பு பணி appeared first on Dinakaran.

Related Stories: