காஞ்சிபுரத்தில் ஜமாபந்தி நிறைவு விழாவில் ₹2.83 கோடி மதிப்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் கலைச்செல்வி வழங்கினார்

காஞ்சிபுரம் மே 26: காஞ்சிபுரத்தில் நடந்த ஜமாபந்தி நிறைவுநாளில் ₹2.83 கோடி மதிப்பில், பயனாளிகளுக்கு நடத்திட்ட உதவிகளை கலெக்டர் கலைச்செல்வி மோகன் வழங்கினார். காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில், கடந்த 16ம் தேதி முதல் நேற்று வரை ஜமாபந்தி நடைபெற்றது. இதன் நிறைவு விழா நேற்று நடந்தது. காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமை தாங்கினார். பின்னர், மக்களின் குறைகளை களையும் பொருட்டு அவர்களின் கோரிக்கை மனுக்களை பெறுவதற்காக கிராம வாரியாக விளம்பரம் செய்யப்பட்டு 6 நாட்கள் 1432ம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் நடைபெற்றது. இதில், வருவாய் ஜமாபந்தியில் பொதுமக்களிடமிருந்து இதுவரை 1135 மனுக்கள் பெறப்பட்டு, 102 மனுக்கள் மீது உடனடி விசாரணை மேற்கொண்டும், இதர மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டு, 134 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள், 41 பயனாளிகளுக்கு பட்டா மாற்றம், 25 பயனாளிகளுக்கு முதியோர் உதவித் தொகையும், 25 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டை என மொத்தம் 225 தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு வருவாய் தீர்வாய கூட்டத்தில் ₹2 கோடியே 83 லட்சத்து98 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வழங்கினார்.

மேலும், மனுக்களில் 54 இதர துறைகள் சார்ந்த மனுக்கள் அன்றைய தினமே சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. நிலுவையில் உள்ள மனுக்கள் மீது விரைவில் விசாரணை மேற்கொண்டு விசாரணையின் அடிப்படையில் தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என தெரிவித்துக் கொள்ளப்பட்டது. இந்நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன், வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி, மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், காஞ்சிபுரம் ஒன்றிய குழுத்தலைவர் மலர்க்கொடி குமார், மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் நித்தியா சுகுமார், மாநகராட்சி துணை மேயர் குமரகுருநாதன், காஞ்சிபுரம் வட்டாட்சியர் புவனேஸ்வரன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.

கலைச்செல்வி மோகன் பொறுப்பேற்பு
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டராக இருந்த ஆர்த்தி, அனைவருக்கும் கல்வி இயக்ககம் திட்ட இயக்குனராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதைதொடர்ந்து, காஞ்சிபுரம் கலெக்டராக கலைச்செல்வி மோகன் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டராக கலைச்செல்வி மோகன் நேற்று காலை பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது, ‘தமிழ்நாடு அரசின் திட்டங்களை, அனைத்து தரப்பு மக்களுக்கு கொண்டு செல்ல பாடுபடுவேன்’ என்றார். இவருக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர். விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் கலைச்செல்வி மோகன் பிஎஸ்சி, எம்ஏ, எம்பிஏ படித்துள்ளார், இவருக்கு தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு போன்ற மொழிகள் தெரிந்தவர். இவர், இதற்கு முன்பு நில அளவை துறையில் கூடுதல் இயக்குனராக பணியாற்றி வந்தார். தற்போது, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டராக பெறுப்பேற்றுள்ளார். இவரது கணவர் மோகன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இதில் ஒருவர் எம்பிபிஎஸ் படித்து வருகிறார். மற்றொருவர் 9ம் வகுப்பு படித்து வருகிறார்.

The post காஞ்சிபுரத்தில் ஜமாபந்தி நிறைவு விழாவில் ₹2.83 கோடி மதிப்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் கலைச்செல்வி வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: