காஞ்சிபுரம் அருகே தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு

காஞ்சிபுரம், மே 24: திம்மசமுத்திரம் தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில், தனியார் பள்ளி வாகனங்களின் தரம் குறித்து போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தமிழகத்தில் செயல்படும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவ – மாணவிகளை ஏற்றிச்செல்ல பேருந்துகள், வேன்கள் உள்ளிட்டவைகளை பள்ளி நிர்வாகங்கள் பயன்படுத்தி வருகிறது. இதனால், பள்ளி வாகனங்களின் தரம் குறித்து ஆண்டுதோறும் ஆய்வு செய்ய தமிழக அரசு போக்குவரத்து துறைக்கு உத்தரவிட்டுள்ளது. இதனால், கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தனியார் பள்ளிகளின் வாகனங்களை ஆய்வு செய்து அனுமதி வழங்கிட தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை, வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து எல்லைக்கு உட்பட்ட காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர் உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் 44 தனியார் பள்ளிகளின் 250 பேருந்துகள் மற்றும் வேன்களை ஆய்வு செய்யும் சிறப்பு முகாம் காஞ்சிபுரம் அடுத்த திம்மசமுத்திரம் தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் தினகரன் தலைமையில் நடைபெற்ற பள்ளி வாகனங்கள் சிறப்பு முகாமில், காஞ்சிபுரம் டிஎஸ்பி ஜீலியட் சீசர் முன்னிலையில் தனியார் பள்ளி வாகனங்களில் இருக்கைகள் அவசர உதவி கதவுகள், முதலுதவி பெட்டிகள், தீயணைப்பு கருவிகள் உள்ளிட்டவை குறித்து மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம் தலைமையிலான குழுவினர், பள்ளி வாகனங்களில் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தின்படி 28 விதிமுறைகள் படிக்கட்டு, ஜன்னல் மற்றும் வாகன தகுதி சான்றிதழ், டிரைவர் முன் பின் கேமராக்கள் போன்ற வசதிகள் இருக்கிறதா உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, தேர்வு பெறாத வாகனங்கள் மீண்டும் சீரமைத்து கொண்டுவர திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது. ஆய்வின்போது, தீயணைப்பு துறை சார்பில் சங்கர், கல்வி துறை சார்பில் இளமாறன், சிவகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post காஞ்சிபுரம் அருகே தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: