சாலை விரிவாக்க பணிக்காக அகற்றப்பட்ட சிசிடிவி கேமராக்களை மீண்டும் பொருத்த வேண்டும் : பொதுமக்கள் கோரிக்கை

உத்திரமேரூர், மே 24: உத்திரமேரூர் – கட்டியாம்பந்தல் இடையே சாலை விரிவாக்க பணிக்காக அகற்றப்பட்ட சிசிடிவி கேமராக்களை மீண்டும் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
உத்திரமேரூரில் குற்ற செயல்களில் ஈடுபடுவோரை கண்காணிக்கும் விதமாக, உத்திரமேரூர் காவல் துறை சார்பில், தனது கட்டுப்பாட்டில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் சிசிடிவி கேமராகள் பொருத்தப்பட்டு, காவல் நிலையத்தில் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதில், உத்திரமேரூர் – செங்கல்பட்டு சாலையில் கட்டியாமந்தல் வரை கல்லூரி, பள்ளி வளாகம், அரசு அலுவலக வளாகம், பேருந்து நிலையங்கள் கூட்ரோடுகள் என பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் அனைத்திலும் காவல் துறை சார்பில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருந்தது. இதனால், குற்ற சம்பவங்கள் குறைந்து காணப்பட்டது.

குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள்களை கண்காணித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தன. மேலும், சாலை விபத்துகள் ஏற்படும்போது கண்காணிப்பு கேமராவை கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டும் வந்தது. இந்நிலையில், 9 மாதங்களுக்கு முன்பு உத்திரமேரூர் – புக்கத்துறை இடையே, 4 வழிச்சாலை பணிகள் துவங்கியன. இந்த சாலைப் பணிகளுக்காக சாலை ஓரம் இருந்த பெரும்பாலான மரங்கள், சாலையோரம் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டும், சாலை அமைக்கப்பட்டு வருகிறது. மேலும், சாலை ஓரங்களில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களையும் நெடுஞ்சாலைதுறை நிர்வாகத்தினர் அகற்றியதாக கூறப்படுகிறது.

தற்போது, சாலை பணியானது பட்டாங்குளம் எல்லை வரை பணிகள் முடியும் தருவாயில் உள்ளது.இந்நிலையில், சாலையேரங்களில் இருந்த சிசிடிவி கேமராக்கள் மட்டும் தற்போது வரை பொருத்தப்படாமல் உள்ளது. இதனால், குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்களையும், விபத்து நிகழ்ந்தால் அதனை கண்டறிவதிலும் காவல் துறையினருக்கு பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் சம்பந்தப்பட்ட துறையினருக்கு உத்தரவிட்டு சிசிடிவி கேமராக்களை மீண்டும் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post சாலை விரிவாக்க பணிக்காக அகற்றப்பட்ட சிசிடிவி கேமராக்களை மீண்டும் பொருத்த வேண்டும் : பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: