ஜூன் மாதம் 13ம் தேதி முதல் 17ம் தேதி வரை சென்னையில் சர்வதேச ஸ்குவாஷ் போட்டி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: சர்வதேச ஸ்குவாஷ் போட்டி சென்னையில் ஜூன் 13ம் ேததி முதல் 17ம் தேதி வரை நடைபெறுகிறது என்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாடு துறை அமைச்சர் உதயநிதி கூறினார். தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: 2023 ‘SDAT-WSF’ ஸ்குவாஷ் உலக கோப்பையை ஜூன் 13 முதல் ஜூன் 17 வரை நடத்த சென்னை தயாராகி வருகிறது. தமிழ்நாடு அரசின் நிதியுதவியுடன் நடைபெறும் இந்த போட்டி, உலகெங்கிலும் உள்ள சிறந்த ஸ்குவாஷ் வீரர்களை ஒன்றிணைப்பது மட்டுமல்லாமல் கோப்பையினை வெல்ல நமது வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

2023 ஸ்குவாஷ் உலக கோப்பையில் போட்டியை நடத்தும் இந்தியாவுடன் ஹாங்காங், சீனா, ஜப்பான், மலேசியா, எகிப்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் கொலம்பியா ஆகிய 8 நாடுகளை சேர்ந்த தலைசிறந்த ஸ்குவாஷ் வீரர்கள் பங்கேற்கின்றனர். நமது ரசிகர்கள் தங்கள் சொந்த அணியை ஆதரிக்கவும், உலக தரம் வாய்ந்த ஸ்குவாஷ் விளையாட்டை காணவும் வாய்ப்பை பெறுவார்கள். இந்த ஆட்சியில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் விளையாட்டு துறையில் முன்னேற்றம் பெற வேண்டும் என்ற அடிப்படையில் செஸ் ஒலிம்பியாட், சர்வதேச மகளிர் டென்னிஸ் நடத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில் மேலும் சிறப்பு செய்யும் விதமாக “முதலமைச்சர் கோப்பை” போட்டிகள் மாநிலம் முழுவதும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகிறது. வருகின்ற நாட்களில் சர்வதேச அளவிலான ஹாக்கி மற்றும் ஸ்குவாஷ் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. “நான் என்று மட்டும் இல்லாமல் நாம் என்ற உணர்வுடன்” அனைத்து நிலைகளிலும் தமிழ்நாடு முன்னேற அனைவரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் உழைத்திட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post ஜூன் மாதம் 13ம் தேதி முதல் 17ம் தேதி வரை சென்னையில் சர்வதேச ஸ்குவாஷ் போட்டி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: