திருச்சி காவல் நிலையத்தில் யூடியூபர் பெலிக்சிடம் விடிய விடிய விசாரணை

திருச்சி: திருச்சி ராம்ஜிநகர் காவல் நிலையத்தில் யூடியூபர் பெலிக்சிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தினர். காவல்துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த யூடியூபர் சங்கரை கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து முசிறி டிஎஸ்பி யாஸ்மின் கொடுத்த புகாரின்பேரின் சங்கர் மற்றும் அவரது பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் நிர்வாகி பெலிக்ஸ் ஜெரால்டு ஆகியோர் மீது திருச்சி சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கைதான இருவரில் சங்கர் கோவை சிறையிலும், பெலிக்ஸ் ஜெரால்டு திருச்சி சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். சங்கரை ஒருநாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்த திருச்சி போலீசார் பெலிக்ஸ் ஜெரால்டையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு நேற்று திருச்சி கூடுதல் மகிளா கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. விசாரணைக்காக சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துவரப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பெலிக்ஸ் வழக்குக்கு தேவையில்லாத ஆவணங்களை பறிமுதல் செய்ததால் வருமானம் பாதிக்கப்பட்டுள்ளதாக நீதிபதியிடம் முறையிட்டார். பின்னர் வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயப்பிரதா ஒருநாள் காவலில் வைத்து விசாரிக்க போலீசாருக்கு அனுமதி அளித்தார். இதையடுத்து திருச்சி ராம்ஜிநகரில் உள்ள காவல் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்ட பெலிக்ஸ் ஜெரால்டிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தினர். தொடர் விசாரணைக்கு பின்னர் இன்று மாலை பெலிக்ஸ் மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளார்.

 

The post திருச்சி காவல் நிலையத்தில் யூடியூபர் பெலிக்சிடம் விடிய விடிய விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: