ஓஎம்ஆர் தையூர் பகுதியில் பாதுகாப்பான முறையில் பாலம் அமைக்கும் பணி: பொதுமக்கள் வலியுறுத்தல்

திருப்ேபாரூர்: தையூர் ஓஎம்ஆர் பகுதியில் பாதுகாப்பான முறையில் பாலம் அமைக்கவேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர். திருப்போரூரில் இருந்து கேளம்பாக்கம் வரை 8 கிமீ தூரம் சாலை உள்ளது. இதற்கு இடைப்பட்ட பகுதியில்தான் தையூர் ஏரி உள்ளது. மழை காலங்களில் தையூர் ஏரி நிரம்பி வழியும். ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர் பல்வேறு கால்வாய் வழியாக ஓஎம்ஆர் சாலையை கடந்து பக்கிங்காம் கால்வாயில் சென்று பின்னர் கோவளம் அருகே கடலில் கலக்கிறது. தையூர் ஏரியின் உபரிநீர் ஓஎம்ஆர் சாலையை கடக்கும்போது மூழ்கடித்து செல்லும் நிலை ஏற்படும். அப்போது சில நாட்களுக்கு போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்படும். எனவே, வெள்ளநீர் மற்றும் ஏரியின் உபரிநீர் வெளியேறும் கால்வாய்களை அகலப்படுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்து பேரிடர் மேலாண்மை சிறப்பு நிதி திட்டத்தின் கீழ் மழைநீர் வடிகால்வாய்களில் உள்ள குழாய்களை அகற்றிவிட்டு பாலம் அமைக்க முடிவு செய்து பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

குறிப்பாக, தையூர் பகுதியில் பணி அதிவேகமாக நடக்கிறது. பாலப்பணி நடைபெறும்போது நெடுஞ்சாலைத்துறை முறையாக அறிவிப்பு பலகை மற்றும் எச்சரிக்கை பலகை வைப்பதில்லை. தற்போது பாலத்தின் ஒருபக்க பணி முடிவடைந்து போக்குவரத்து தொடங்கியுள்ள நிலையில் மற்றொரு பக்கத்தில் தொடர்ந்து பணி நடைபெற்று வருகின்றன. இதற்காக ராட்சத பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இதில் இரும்பு கம்பிகள் நீட்டிக்கொண்டு நிற்கின்றன. இதனால் இவ்வழியாக கார், இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, பாலப்பணியை மேற்கொள்ளும் ஒப்பந்த நிறுவனமும் பணியை கண்காணிக்கும் மாவட்ட நெடுஞ்சாலைத்துறையும் எச்சரிக்கை பலகை அமைத்து பணி செய்யவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

 

The post ஓஎம்ஆர் தையூர் பகுதியில் பாதுகாப்பான முறையில் பாலம் அமைக்கும் பணி: பொதுமக்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: