தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்த விவகாரம்; பாஜ மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் கேசவ விநாயகம் நேரில் ஆஜராகவில்லை: இறுதிக்கட்ட விசாரணை பாதிப்பதாக சிபிசிஐடி போலீசார் தகவல்

சென்னை: தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் முன்பு பாஜ மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், ஆர்.எஸ்.எஸ்.பிரமுகர் கேசவ விநாயகம் மற்றும் முரளி ஆகியோர் இன்று ஆஜராகவில்லை. இதனால் இறுதி கட்ட விசாரணை பாதிக்கப்பட்டுள்ளதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர். நாடாளுமன்ற தேர்தலின் போது தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த மார்ச் மாதம் 26ம் தேதி நெல்லைக்கு ரயில் மூலம் கொண்டு சென்ற ரூ.4 கோடி ரொக்கத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பணத்துடன் பிடிபட்ட 3 பேர், ரூ.4 கோடி பணம் நெல்லை நாடாளுமன்ற பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது என வாக்கு மூலம் அளித்தனர். அதைதொடர்ந்து, இந்த வழக்கு தாம்பரம் காவல் நிலையத்தில் இருந்து சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு தற்போது விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் இதுவரை நயினார் நாகேந்திரனின் ஓட்டல் ஊழியர் சதீஷ், அவரது சகோதரர் நவீன் மற்றும் வைகுண்டத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் பெருமாள், நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன், முருகனிடம் பணியாற்றும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வாக்கு மூலம் பெற்றுள்ளனர்.

மேலும், அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் படி, பணம் கை மாறியதாக கூறப்படும் ஓட்டல் உரிமையாளரான பாஜக தொழிற்துறை மாநில தலைவர் கோவர்த்தனிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் அவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதால் அவரது 2 மகன்களான பாலாஜி, கிஷோர் ஆகியோரிடம் கடந்த 7ம் தேதி சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர். கோவர்தன் மகன்கள் அளித்த வாக்குமூலத்தின் படி, பாஜ மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் மற்றும் பாஜ நிர்வாகி முரளி மற்றும் ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் கேசவ விநாயகம் ஆகியோருக்கு சிபிசிஐடி போலீசாரால் எழும்பூரில் உள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் விசாரணை அதிகாரிகள் முன்பு ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப் பட்டது.

அந்த சம்மனை தொடர்ந்து இன்று காலை 10 மணிக்கு சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும். ஆனால் பாஜக பிரமுகர்களான 3 பேரும் விசாரணைக்கு ஆஜராகாமல் தனது வழக்கறிஞர்கள் மூலம் மற்றொரு நாள் நேரில் ஆஜராகுவதாக சிபிசிஐடி அலுவலகத்துக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளனர். ரூ.4 கோடி பறிமுதல் செய்த வழக்கில் தற்போது இறுதி கட்ட விசாரணை நடந்து வருகிறது. 3 பாஜக பிரமுகர்கள் அளிக்கும் பதிலை தொடர்ந்து தான் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனிடம் விசாரணை நடத்த முடியும் என்று சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில் இவர்கள் தொடர்ந்து தாமதம் செய்து வருவதால், இந்த விவகாரத்தில் பெரிய அளவில் சந்தேகமும் போலீசாருக்கு எழுந்துள்ளது.

 

The post தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்த விவகாரம்; பாஜ மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் கேசவ விநாயகம் நேரில் ஆஜராகவில்லை: இறுதிக்கட்ட விசாரணை பாதிப்பதாக சிபிசிஐடி போலீசார் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: