வைக்கோலுக்கு அடியில் மறைத்து 4 டன் ரேஷன் அரிசி கடத்திய டெம்போ பறிமுதல் மார்த்தாண்டம் அருகே பரபரப்பு

குளச்சல்,மே 21: வைக்கோலுக்கு அடியில் மறைத்து 4 டன் ரேஷன் அரிசி கடத்திய டெம்போவை அதிகாரிகள் பறிமுதல்செய்தனர். குமரி மாவட்டம் இரவிபுதூர்கடை பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் கல்குளம் வட்ட வழங்கல் அலுவலர் சுனில் குமார் தலைமையில் அலுவலக பணியாளர்கள் நேற்று அதிகாலையில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த டெம்போவை நிறுத்த முயற்சித்தனர். ஆனால் டெம்போ நிற்காமல் அதிவேகமாக சென்றது. இதனால் வட்ட வழங்கல் அலுவலர்கள் வாகனத்தை பின் தொடர்ந்து சென்றனர். சுமார் 4 கி.மீ. துரத்தி சென்ற பிறகு மார்த்தாண்டம் மேம்பாலத்தில் வைத்து டெம்போவை மடக்கி பிடித்தனர்.

அப்போது டெம்போ டிரைவர் டெம்போவை நிறுத்திவிட்டு இறங்கி தப்பி ஓடி விட்டார். பின்னர் டெம்போவை சோதனை செய்த போது அதில் வைக்கோல் கட்டுகளுக்கு அடியில் ரேஷன் அரிசி மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அதில்இருந்த சுமார் 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றை கேரளாவுக்கு கடத்தி செல்ல முயற்சித்தது தெரிய வந்தது . பின்னர் அரிசியுடன் டெம்போவையும் பறிமுதல் செய்தனர். ரேஷன் அரிசி குளச்சல் அருகே உடையார்விளை அரசு கிடங்கியில் ஒப்படைக்கப்பட்டது. டெம்போ வட்ட வழங்கல் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் சுங்கான்கடை மற்றும் அழகியமண்டபம் பகுதியில் 3.5 டன் கடத்தல் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

The post வைக்கோலுக்கு அடியில் மறைத்து 4 டன் ரேஷன் அரிசி கடத்திய டெம்போ பறிமுதல் மார்த்தாண்டம் அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: