குடியாத்தத்தில் இன்று கோலாகலம்; கெங்கையம்மன் சிரசு ஊர்வலம்: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

குடியாத்தம்: குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் சிரசு ஊர்வலம் இன்று கோலாகலமாக நடந்தது. லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்து வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் சிரசு திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். ஆண்டுதோறும் வைகாசி மாதம் 1ம்தேதி சிரசு திருவிழா நடைபெறும். இந்த திருவிழாவில் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி அண்டை மாநிலங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்வார்கள். அதன்படி இந்தாண்டு கெங்கையம்மன் சிரசு திருவிழா வைகாசி 1ம்தேதியான இன்று காலை கோலாகலமாக நடந்தது.

இதையொட்டி அம்மனுக்கு காப்பு கட்டுதல், பால்கம்பம் நடுதல் போன்ற நிகழ்ச்சிகளுடன் சிரசு திருவிழா கடந்த 30ம்தேதி தொடங்கியது. தினமும் அம்மனுக்கு மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதைதொடர்ந்து 11ம்தேதி அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவமும், நேற்று தேரோட்டமும் நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான சிரசு ஊர்வலம் இன்று காலை நடந்தது. இதையொட்டி அதிகாலை நடை திறக்கப்பட்டு கெங்கையம்மனுக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள், குங்குமம், இளநீர் உள்பட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடந்தது. இதையடுத்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இதைதொடர்ந்து உற்சவ அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. பின்னர் அம்மனுக்கு பக்தர்கள் சீர்வரிசை பொருட்கள் எடுத்து வந்தனர். தொடர்ந்து தரணம்பேட்டை முத்தியாலம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்யப்பட்டு சிரசு ஊர்வலம் புறப்பட்டது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில் அம்மன் சிரசு ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது. அப்போது பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்தும், மலர் தூவியும் அம்மனை தரிசனம் செய்தனர். ஊர்வலத்தில் பம்பை, உடுக்கை, மேளதாளம் முழங்க, சிலம்பாட்டம், புலியாட்டம் ஆடியபடி பக்தர்கள் சென்றனர். வழிநெடுகிலும் லட்சக்கணக்கான தேங்காய் உடைத்து பக்தர்கள் தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.

அம்மன் சிரசு நடுப்பேட்டை, காந்திரோடு, ஜவஹர்லால் தெரு வழியாக சுமார் 1 கி.மீ. தூரம் பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து கோபாலபுரத்தில் உள்ள கெங்கையம்மன் கோயிலை வந்தடைந்தது. பின்னர் சிரசு மண்டத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள சண்டாளச்சி அம்மன் உடலில் சிரசு பொருத்தப்பட்டு கண் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. அப்போது ஏராளமான பெண்கள், அம்மனுக்கு கூழ்வார்த்து நேர்த்தி கடன் செலுத்தினர். பல இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானம், கூழ், மோர், பானகம், குளிர்பானம் போன்றவை வழங்கப்பட்டது. சிரசு ஊர்வலம் நடைபெற்ற தரணம்பேட்டை முதல் கோபாலபுரம் வரை இருபுறமும் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர்.

ஆங்காங்கே மரங்கள், சுற்றுச்சுவர்கள், வீடுகளின் மாடியின் மீது நின்றும் மலர்கள் தூவி அம்மனை தரிசனம் செய்தனர். கோயிலில் அம்மன் கண் திறப்பு நிகழ்ச்சிக்கு பின் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்து வருகின்றனர். இரவு 8மணிக்கு மீண்டும் அம்மன் சிரசு பிரிக்கப்பட்டு கவுண்டன்ய மகாநதி, ராஜேந்திரசிங் தெரு வழியாக சுண்ணாம்புபேட்டையில் உள்ள புங்கனூர் அம்மன் கோயிலுக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்படும். இதைதொடர்ந்து நாளை அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழாவும், நாளை மறுநாள் பூப்பல்லக்கு வீதியுலாவும் நடைபெறுகிறது. பின்னர் விடையாற்றி உற்சவத்துடன் சிரசு திருவிழா நிறைவடைகிறது.

சிரசு திருவிழாவையொட்டி குடியாத்தம் நகராட்சி சார்பில் பக்தர்களுக்கு குடிநீர், சுகாதாரம், முதலுதவி மருத்துவ வசதிகள் செய்யப்பட்டிருந்தது. மேலும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. வேலூர் சரக டிஐஜி முத்துசாமி உத்தரவின்பேரில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்த 1,700 போலீசார் எஸ்பி ராஜேஷ்கண்ணன் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், ஆந்திரா, கர்நாடகாவில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டிருப்பதால் குடியாத்தம் நகரம் முழுவதும் மக்கள் வெள்ளமாகவே காணப்படுகிறது. மேலும் கொடி, தோரணங்கள், வண்ண மின்விளக்குகள் அலங்காரத்தால் நகரம் விழாக்கோலமாக காட்சியளிக்கிறது.

The post குடியாத்தத்தில் இன்று கோலாகலம்; கெங்கையம்மன் சிரசு ஊர்வலம்: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Related Stories: