கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி

விழுப்புரம்: மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்து 11 பேர் உயிரிழந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் மு.க.ஸ்டாலின் சிகிச்சை பெறுவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகிறார். கள்ளச்சாராயம் குடித்ததில் உடல் நலம் பாதிக்கப்பட்ட 33-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவரிடம் கேட்டறிந்தார்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார் குப்பத்தில் நேற்று கள்ளச்சாராயம் விற்கப்பட்டுள்ளது. அந்த கள்ளச்சாராயத்தை அதே கிராமத்தை சேர்ந்த 44 பேர் வாங்கி குடித்துள்ளனர். கள்ளச்சாராயம் குடித்த அனைவருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கள்ளச்சாராயம் குடித்த 44 பேரும் முண்டியபாக்கம், மரக்காணம், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் கள்ளச்சாராயம் குடித்து 11 பேர் உயிரிழந்த நிலையில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் மு.க.ஸ்டாலின் சிகிச்சை பெறுவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

அதன்பிறகு கள்ளச்சாராய மரணம் தொடர்பாக 4 மாவட்ட அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி கருத்தரங்கு கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடத்தினார். ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் பொன்முடி, எ.வ.வேலு, செஞ்சிமஸ்தான், தா.மோ.அன்பரசன் ஆகியோர் பங்கேற்றனர்.

விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர்கள் காவல்துறை அதிகாரிகள் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். இந்த ஆலோசனையில் விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். சம்பந்தப்பட்ட நபர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

* முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி

கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டோருக்கு உடனடியாக சிகிச்சை தர ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மருத்துவ சிகிச்சை பலன் அளிக்காமல் 9 பேர் உயிரிழந்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில் கள்ளச்சாராயம் விற்றவர்கள் மெத்தனால் எரிசாராயத்தை பயன்படுத்தியுள்ளனர். கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டோர்க்கு சிறப்பான முறையில் சிகிச்சை அளித்திட மருத்துவர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார்.

கள்ளச்சாராயம் விற்றவர்கள் அதில் மெத்தனால் எரிசாராயம் பயன்படுத்தியுள்ளனர். டாஸ்மாக் பாட்டில்களில் மெத்தனால் எரிசாராயத்தை ஊற்றி விற்றுள்ளனர். கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு காரணமான அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என்று முதல்வர் கூறியுள்ளார். கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்படும் என்று முதல்வர் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

The post கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: