டிடிசிபி அனுமதி பெறுவதற்கான சிக்கல்கள் விரைவில் தீர்க்கப்படும்: அமைச்சர் முத்துசாமி உறுதி

ஈரோடு: டிடிசிபி அனுமதி பெறுவதில் உள்ள சிக்கல்கள் விரைவில் தீர்க்கப்படும் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார். ஈரோட்டில் வீட்டு வசதி வாரியத்துறை அமைச்சர் முத்துசாமி நேற்று அளித்த பேட்டி: வீட்டு வசதி வாரியத்தில் உள்ள 50 சதவீதம் காலிப்பணியிடங்களும், டிடிசிபியில் உள்ள 36 சதவீதம் காலிப் பணியிடங்களும் விரைவில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. சர்வீஸ் கமிஷன் மூலம் நிரப்பிட வேண்டி இருப்பதால் சற்று கால தாமதம் ஏற்படுகிறது. டிடிசிபியில் இருந்த பல்வேறு பிரச்னைகள் தீர்க்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக பொறியாளர்கள் உள்ளிட்ட 44 சங்கங்களை அழைத்து கருத்துக் கேட்டோம். அவர்கள் 41 கோரிக்கைகளை முன்வைத்தனர். அதில் 18 கோரிக்கைகளை ஏற்க முடியாது என தெளிவுபடுத்திவிட்டோம். 6 கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றி விட்டோம். 9 கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட துறைகளுடன் பேசியும், 6 கோரிக்கைகளுக்கு அதற்கான ஆலோசகர்களிடம் பேசியும், பரிந்துரை பெற்று நிறைவேற்ற திட்டமிட்டுள்ளோம். இதனால் டிடிசிபி அனுமதி பெறுவதில் உள்ள சிக்கல், தாமதம் போன்ற பிரச்னைகள் விரைவில் தீர்க்கப்படும். விரைவாக டிடிசிபி அனுமதி கிடைக்கும்.

அலுவலர்கள், அதிகாரிகள் வாடகை அடிப்படையில் தங்குவதற்கான 136 இடங்களில் குடியிருப்புகள் உள்ளன. இவற்றில் 60 குடியிருப்புகள் மிக மோசமாக உள்ளதால் அவற்றை இடிக்கும் பணிகளை தொடங்கி உள்ளோம். அந்த இடத்தில் புதிய அடுக்கு மாடி குடியிருப்புகளை சிறப்பான முறையில் கட்டத் திட்டமிட்டுள்ளோம். சுயநிதி திட்டத்தில் ஏற்கனவே விற்கப்பட்ட 10 இடங்களில் வீட்டு வசதி வாரியம் மூலமாக குடியிருப்பு கட்டித்தர கேட்டுள்ளனர். அவர்கள் ஒத்துழைக்கும் பட்சத்தில் நாங்கள் அப்பணியை செய்து கொடுக்க தயாராக உள்ளோம். அதற்கு சில சட்ட திருத்தங்கள் தேவை. அதை ஒன்றிய அரசிடம் பெற உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

The post டிடிசிபி அனுமதி பெறுவதற்கான சிக்கல்கள் விரைவில் தீர்க்கப்படும்: அமைச்சர் முத்துசாமி உறுதி appeared first on Dinakaran.

Related Stories: