கவுண்டமணி-செந்தில் சந்திப்பு போன்று டிடிவி.தினகரன்-ஓபிஎஸ் சந்திப்பு கோமாளித்தனமானது: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்

சென்னை: ஓபிஎஸ்-டிடிவி.தினகரன் சந்திப்பு என்பது, கவுண்டமனி, செந்தில் சந்திப்பு போன்று கோமாளித்தனமானது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: ஓ.பன்னீர்செல்வம், டிடிவி.தினகரன் சந்திப்பு என்பது கவுண்டமணி, செந்தில் சந்திப்பு போன்றது. நகைச்சுவையோடு ஒரு கோமாளித்தனமான சந்திப்புதான் இது. ஓபிஎஸ் தர்மயுத்தத்ததை அந்த குடும்பத்திற்கு எதிராக தொடங்கினார். ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டை கூறுபோட்டு விற்ற குடும்பம் சசிகலா குடும்பம் என்றார். டிடிவியை பொறுத்தவரையில் அவரைபோல ஒரு கிரிமினல் உலகத்தில் யாரும் கிடையாது என்றார். டிடிவி.தினகரனை ஆட்சி இருக்கும் போதே சந்தித்து என்னை முதல்வராக்குங்கள் என்று கேட்டவர் தான் ஓபிஎஸ். இவர் டிடிவியை சந்தித்தது அதிமுகவில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. அவர்கள் வேறு வகையில் கூட்டணி அமைத்து வந்தால் நீங்கள் சேர்த்துக் கொள்வீர்களா என்று கேட்கிறார்கள். ஓபிஎஸ்சை போல நாங்கள் குழப்பவாதிகள் கிடையாது.

அதேபோன்று கொல்லைப்புறமாக வந்தால் எப்படி என்று கேட்கிறார்கள். பாஜவோடு வந்தால் எப்படி என்றும் கேட்கிறார்கள். பாஜ அதுபோன்று நிச்சயமாக செய்யாது. அதுபோன்ற நிர்பந்தத்தை எங்கள் மீது வைக்காது. அதே நேரத்தில் அனைத்து வழியும் அடைக்கப்பட்டதால் சில அடிமட்ட தொண்டர்கள் அதிமுகவுக்கு வரலாம். ஆனால் இந்த 3 பேருக்கும் அதிமுக கதவுகள் சாத்தப்பட்டு விட்டது. ஓபிஎஸ், டிடிவி ஆகிய இருவரும் 2 அமாவாசைகள், 2 அமாவாசைகளும் சேர்ந்துள்ளார்கள், 2 அமாவாசைகள் சேர்ந்தால் மொத்த தமிழ்நாடும் இருட்டாகிவிடும். நரி வலம் வந்தால் என்ன இடம் வந்தால் என்ன, எங்களை கடிக்கவில்லை. வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ெஜசிடி.பிரபாகர் ஆகியோர் எங்களுக்கு எதிரி இல்லை,அவர்களும் தற்பொழுது அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

The post கவுண்டமணி-செந்தில் சந்திப்பு போன்று டிடிவி.தினகரன்-ஓபிஎஸ் சந்திப்பு கோமாளித்தனமானது: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம் appeared first on Dinakaran.

Related Stories: