ஒரு லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் விவசாயிகளுக்கு பாதிப்புகள் இல்லாமல் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும்-அரசு விழாவில் ராஜேஸ்குமார் எம்பி தகவல்

நாமக்கல் : நாமக்கல் மாவட்டத்தில், விவசாயிகளுக்கு பாதிப்புகள் இல்லாமல் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும். இதன் மூலம் ஒரு லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும் என, நாமக்கல்லில் நடந்த அரசு விழாவில் ராஜேஸ்குமார் எம்பி தெரிவித்தார்.நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், நேற்று அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமை வகித்தார். எம்எல்ஏ.,க்கள் ராமலிங்கம், பொன்னுசாமி முன்னிலை வகித்தனர். விழாவில் 305 பயனாளிகளுக்கு ₹1.99 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஸ்குமார் எம்பி ஆகியோர் வழங்கினர். விழாவில் ராஜேஸ்குமார் எம்பி பேசியதாவது:

தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்ற 2 ஆண்டு காலத்தில், பல்வேறு மக்கள் நலப்பணிகள் நடந்துள்ளது. கொரோனா பேரிடரில் இருந்து மக்களை காக்க, முறையாக 2 டோஸ் கொரோனா தடுப்பூசி, முதல்வரின் சீரிய நடவடிக்கையால் போடப்பட்டுள்ளது. இதை ஒன்றிய அரசின் சுகாதாரத்துறை அமைச்சரே பாராட்டினார். தமிழகத்தில் உள்ள அரசு வேலைவாய்ப்புகளை, வடமாநில இளைஞர்கள் தட்டிப் பறிக்கும் அவல நிலையை, அப்போதைய அதிமுக ஆட்சியாளர்கள் ஏற்படுத்தினார்கள். தமிழக முதல்வர் பொறுப்பேற்றவுடன் அதனை நீக்கி, தமிழ்நாட்டில் அரசு வேலைவாய்ப்பு, தமிழக இளைஞர்களுக்கு மட்டும் தான் என சட்டம் கொண்டு வந்துள்ளார்.

நாமக்கல் நகரில் புறவழிச்சாலை அமைக்க ₹197 கோடி, ஆவின் பால் பண்ணை அமைக்க ₹64 கோடியை முதல்வர் ஒதுக்கினார்.நாமக்கல் மாவட்டத்தில் படித்த இளைஞர்கள் அதிகம் இருக்கிறார்கள். அவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுப்பது அரசின் தலையாய கடமையாகும். இதற்காக நாமக்கல் மாவட்டத்தில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக கையகப்படுத்தப்படும் நிலத்தில் 60 முதல் 70 சதவீதம், அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலம்.

மீதமுள்ள நிலம், விவசாயத்துக்கு பயன்படாத நிலத்தை தான், அரசு பெற உள்ளது. இதுபற்றி கலெக்டருக்கு நன்றாக தெரியும். விவசாயிகள் எந்த வகையிலும் பாதிக்காத வகையில், சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும். இதன் மூலம் ஒரு லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். பொறியியல் படித்த பட்டதாரிகள் இம்மாவட்டத்தில் அதிகம் இருக்கிறார்கள். அவர்களுக்கு சிப்காட் தொழிற்பேட்டை அமைவதன் மூலம் வேலைவாய்ப்பு கிடைக்கும். இவ்வாறு ராஜேஸ்குமார் எம்பி தெரிவித்தார்.

விழாவில், டிஇஓ மணிமேகலை, உதவி கலெக்டர் பிரபாகரன், மாவட்ட சமூகநல அலுவலர் கீதா, தாட்கோ மாவட்ட மேலாளர் ராஜகுரு, தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் ஜோதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினம் ஒரு திட்டத்தை முதல்வர் செயல்படுத்துகிறார்- அமைச்சர் பெருமிதம்

விழாவில் அமைச்சர் மதிவேந்தன் பேசுகையில், ‘தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற 2 ஆண்டுகளில், தேர்தல் நேரத்தில் அளித்த 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளில், 80 சதவீதத்திற்கும் மேற்பட்டவற்றை முதல்வர் நிறைவேற்றியுள்ளார். தினம் ஒரு மக்கள் நலன் காக்கும் திட்டத்தை முதல்வர் அறிவித்து, செயல்படுத்தி வருகிறார். அனைவருக்கும் அனைத்து நலத்திட்டங்களும் கிடைக்க வேண்டும். அதுமட்டுமின்றி மாநில சுயட்சி, உரிமை உள்ளிட்ட அனைத்தையும் பேணிக்காக்க வேண்டும் என்பது தான் இந்த திராவிட மாடல் ஆட்சி. அனைத்து தரப்பு மக்களுக்கும், அனைத்து திட்டங்களும் சென்றடையும் வகையில், சிறப்பான ஆட்சியை முதலமைச்சர் வழங்கி வருகிறார்,’ என்றார்.

The post ஒரு லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் விவசாயிகளுக்கு பாதிப்புகள் இல்லாமல் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும்-அரசு விழாவில் ராஜேஸ்குமார் எம்பி தகவல் appeared first on Dinakaran.

Related Stories: