ராஜஸ்தான் காங். அரசை காப்பாற்றிய பாஜ தலைவர்கள்: அசோக் கெலாட் சொல்கிறார்

டோல்பூர்: காங்கிரஸ் அரசுக்கு ஆபத்து ஏற்பட்ட போது வசுந்தரா ராஜே உள்ளிட்ட பாஜ தலைவர்கள் ஆட்சி கவிழ்வதில் இருந்து காப்பாற்றினர் என்ற தகவலை ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் வெளியிட்டுள்ளார். ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. பதவியேற்ற நாள் முதல் முதல்வர் கெலாட்டுக்கும் முன்னாள் துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட்டுக்கும் மோதல் இருந்து வருகிறது. இந்நிலையில் ராஜஸ்தான், டோல்பூரில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அசோக் கெலாட், ‘‘ஒன்றிய அமைச்சர்கள் அமித் ஷா, கஜேந்திர சிங் ஷெகாவத், தர்மேந்திர பிரதான் என்னுடைய ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்தனர்.

இதற்காக எம்எல்ஏக்களுக்கு அவர்கள் பணம் கொடுத்ததாக சொல்லப்பட்டது. ரூ.10 கோடியோ அல்லது ரூ.20 கோடியோ எதுவாக இருந்தாலும் அந்த பணத்தை அவர்கள் திருப்பி கொடுக்க வேண்டும். அந்த பணத்தை திருப்பி கொடுக்காவிட்டால் அமித் ஷாவிடம் இருந்து தொடர்ந்து அழுத்தம் வந்து கொண்டேதான் இருக்கும்.உள்துறை அமைச்சரான அவர் மகாராஷ்டிராவில் சிவசேனாவை உடைத்தார். ஆனால், அன்றைக்கு என்னுடைய ஆட்சி கவிழாமல் காப்பாற்றியது முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா, முன்னாள் சபாநாயகர் கைலாஷ் மேக்வால், எம்எல்ஏ சோபாராணி குஷ்வாஹா தான்.

முன்பு பைரோன்சிங் செகாவத் பாஜ முதல்வராக இருந்த போது, அவரது ஆட்சியை கவிழ்க்க நடந்த முயற்சியை காங்கிரஸ் தலைவராக இருந்த நான் ஆதரிக்கவில்லை. அதே முறையில், என்னுடைய ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியை வசுந்தரா ராஜே, மேக்வால் ஆகியோர் விரும்பவில்லை’’ என்றார். வசுந்தரா ராஜே மீதான ஊழல் புகார்கள் குறித்து நடவடிக்கை எடுக்காமல் மென்மையான அணுகுமுறையை பின்பற்றுகிறார் என்று கெலாட்டின் எதிர்ப்பாளரான சச்சின் பைலட் குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

The post ராஜஸ்தான் காங். அரசை காப்பாற்றிய பாஜ தலைவர்கள்: அசோக் கெலாட் சொல்கிறார் appeared first on Dinakaran.

Related Stories: