மதுரை சித்திரைப் பெருவிழாவிற்கான முன்னேற்பாடு பணிகளை அமைச்சர்கள் பி.மூர்த்தி மற்றும் சேகர்பாபு ஆய்வு

மதுரை: மதுரை சித்திரைப் பெருவிழாவிற்கான முன்னேற்பாடு பணிகளை அமைச்சர்கள் பி.மூர்த்தி மற்றும் சேகர்பாபு ஆய்வு செய்தனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் இன்று (26.04.2023) மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் மற்றும் அழகர்கோவில், அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில் சித்திரைப் பெருவிழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து மதுரை அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் திருக்கல்யாணம் மற்றும் திருத்தேரோட்டம் நடைபெறும் இடங்களையும், வைகை ஆற்றில் அருள்மிகு கள்ளழகர் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தினையுட் களஆய்வு செய்து தேவையான முன்னேற்பாடு பணிகளையும், பாதுகாப்பு பணிகளையும் மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினர். பிரசித்திப் பெற்ற மதுரை, அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் சித்திரைப் பெருவிழா 22.04.2023 முதல் 04.05.2023 வரையும், அழகர்கோவில், அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில் சித்திரைப் பெருவிழா 01.05.2023 முதல் 10.05.2023 வரை வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது. இதில் முக்கிய நிகழ்வுகளான திருக்கல்யாணம் 02.05.2023 அன்றும், திருத்தேரோட்டம் 03.05.2023 அன்றும், கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளுதல் 05.05.2023 அன்றும் நடைபெறுகின்றது.

பின்னர், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மதுரை சித்திரை பெருவிழாவினை சீரோடும் சிறப்போடும் கொண்டாடும் வகையில் தேவையான முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்வது தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களின் கூட்டம் நடைபெற்றது. இவ்விழாவிற்கு வருகை தரும் பக்தர்கள் மற்றும் பொது மக்களுக்கு தேவையான குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, மருத்துவ முகாம்களை ஏற்படுத்துதல், தேரோடும் வீதிகளில் எந்த அசம்பாவிதமும் ஏற்படாத வண்ணம் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளுதல், முக்கிய பிரமுகர்களுக்கு கார் பாஸ் வழங்குதல், வாகனங்களை நிறுத்தும் வசதி ஏற்படுத்தி தருதல் போன்ற பணிகளை முடுக்கி விட்டுள்ளோம்.

திருக்கல்யாண வைபவத்திற்கு இந்தாண்டு 12,000 நபர்களை அனுமதிக்க முடிவெடுத்துள்ளோம். வைகை ஆற்றினை சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்தாண்டு அனைத்து பக்தர்களும் மன நிறைவு கொள்ளும் அளவிற்கு எங்களது பணிகள் அமையும். இந்த ஆட்சி பொறுப்பேற்ற பின் 87 திருக்குளங்கள் மராமத்துப் பணிகளுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. இந்தாண்டு இடும்பன் மலை, அனுவாவி, திருநீர்மலை, திருக்கழுக்குன்றம் ஆகிய 4 மலைத் திருக்கோயில்களுக்கு ரூ.66 கோடி செலவில் ரோப் கார் அமைக்க சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்யப்பட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சிகளில் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், சட்டமன்ற உறுப்பினர்கள் கோ.தளபதி, மு.பூமிநாதன், ஆ.வெங்கடேசன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் க.வீ.முரளீதரன், இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.அனீஷ் சேகர், இ.ஆ.ப., மதுரை மாநகராட்சி ஆணையர் சிம்ரன்ஜீத் சிங் கஹ்லோன், இ.ஆ.ப., மாநகர் காவல் ஆணையர் நரேந்திரன் நாயர், இ.கா.ப., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.சிவபிரசாத், இ.கா.ப., மதுரை மாநகராட்சி மேயர் வி.இந்திராணி, துணை மேயர் தி.நாகராஜன், இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் ந.திருமகள், மண்டல இணை ஆணையர் க. செல்லத்துரை, துணை ஆணையர்/செயல் அலுவலர்கள் ஆ.அருணாசலம், மு.இராமசாமி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post மதுரை சித்திரைப் பெருவிழாவிற்கான முன்னேற்பாடு பணிகளை அமைச்சர்கள் பி.மூர்த்தி மற்றும் சேகர்பாபு ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: