தொழிற்சாலை சட்ட திருத்தத்தை கைவிடக்கேட்டு சிஐடியு ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில், ஏப்.20: எட்டு மணி நேர வேலை உரிமையை பறிக்கும் தொழிற்சாலை சட்ட திருத்தத்தை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி சி.ஐ.டி.யு சார்பில் நாகர்கோவிலில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் எட்டு மணி நேர வேலை உரிமையை பறிக்கும் விதமாக தொழிற்சாலைகள் சட்டத்தில் திருத்தத்தை கொண்டு வந்துள்ள அரசை கண்டித்தும், இதில் தொழிலாளர்கள் போராடி பெற்ற சட்டத்தை திருத்தக் கூடாது, ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத கொள்கைகளை தமிழ்நாடு அரசு பின்பற்றக் கூடாது, அனைவருக்கும் 8 மணி நேர வேலையை தொடர்ந்து உத்தரவாதப்படுத்த வேண்டும், 12 மணி நேரமாக வேலை நேரத்தை உயர்த்த கூடாது, தமிழ்நாடு சட்டமன்றத்தில் கொண்டு வந்த இந்த சட்ட திருத்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும்.

மேலும் குறிப்பாக 1948ல் கொண்டு வந்த தொழிலாளர் நல சட்டத்தை மாற்றி அமைக்கும் வகையில் கொண்டு வந்த தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும், தொழிலாளர்களை அரசு வஞ்சிக்க கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் நாகர்கோவிலில் குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் தங்கமோகனன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட தலைவர் பி.சிங்காரன், மாவட்ட பொருளாளர் சித்ரா, மாவட்ட துணை தலைவர்கள் பொன்.சோபன்ராஜ், சந்திரபோஸ், அந்தோணி, விஜயமோகனன், மாவட்ட துணை செயலாளர்கள் சகாய ஆன்றணி, சந்திரகலா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

The post தொழிற்சாலை சட்ட திருத்தத்தை கைவிடக்கேட்டு சிஐடியு ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: